Published : 22 Oct 2019 09:28 AM
Last Updated : 22 Oct 2019 09:28 AM

ரவுடி கொலையில் இளம்பெண், கணவர் உட்பட 5 பேர் கைது: கால்வாயில் வீசப்பட்ட தலை, உடல் மீட்பு

சென்னை

கொரட்டூரில் மாயமான ரவுடி, சிற்றுண்டி நடத்தும் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பெண், அவரது கணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ரெட்டேரி விநாயக புரத்தை சேர்ந்தவர் கிரைம் சுரேஷ் என்ற சுரேஷ் (31). கொரட்டூரில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் இருந்ததால், போலீஸார் இவரை ரவுடி பட்டியலில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி வெளியே சென்ற சுரேஷ், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், கொரட்டூர் காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் கடந்த 18-ம் தேதி புகார் கொடுத்தனர்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து சுரேஷை தேடி வந்தனர்.

அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், பாடியை சேர்ந்த நகைக்கடை சூப்பர்வைசர் ஜெயக் கொடி (34), அவரது மனைவி கார்த்திகா (31), வெல்டர்களான புழல் காவாங்கரை ராஜா (29), கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் சுந்தரகண்டன் (21) ஆகிய 4 பேரையும் போலீஸார் சந்தேகத் தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

சுரேஷை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்களுக்கு உடந்தையாக இருந்த ஒருவர் உட்பட 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ஜெயக்கொடியின் மனைவி கார்த்திகா, பாடி குமரன் நகர் பகுதியில் சிற்றுண்டி கடை நடத்துகிறார். சாப்பிடுவதற்காக அவரது கடைக்கு சுரேஷ் அடிக்கடி வந்து சென்றதில், அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவர் ஜெயக்கொடிக்கு தெரியாமல் இருவரும் சந்தித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்கள் இடையே மனஸ் தாபம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகா விலகிச் செல்ல முயன்றும், சுரேஷ் விடாமல் தொந்தரவு கொடுத் துள்ளார்.

கடந்த 14-ம் தேதி சுரேஷ் மீண்டும் சிற்றுண்டி கடைக்கு வந்து, கார்த்திகாவிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து, கார்த்திகாவின் கணவர் ஜெயக்கொடி, அவரது நண்பர்கள் ராஜா, சுந்தரகண்டன் ஆகியோர் சுரேஷை காரில் கடத்திச் சென்று, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். சடலத்தை விளாங்காடுபாக்கம் பகுதியில் உள்ள முட்புதரிலும், தலையை அருகே உள்ள கால்வாயிலும் வீசிவிட்டு, காரில் தப்பினர்.

தற்போது சுரேஷின் தலை, உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கார்த்திகா, அவரது கணவர் ஜெயக்கொடி, ராஜா, சுந்தரகண்டன் மற்றும் கார் கொடுத்து உதவிய மணிவண்ணன் (28) ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x