

சென்னை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய கோயம்பேடு உள்ளிட்ட 4 இடங்களில் கூடுதலாக 30 முன்பதிவு மையங்கள் வரும் 24-ம் தேதி தொடங்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் மற்றும் மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களில் இருந்து வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
3 நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 8,310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி சிறப்பு பேருந்துகளில் செல்ல இதுவரை 66,773 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.3.26 கோடி வசூலாகியுள்ளது. பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு - 26, தாம்பரம் சானடோரியம் - 2, பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் தலா ஒன்று என 30 சிறப்பு முன்பதிவு மையங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
5 இடங்களில் பேருந்து இயக்கம்
ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் மாத வரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும். திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும். வேலூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, விழுப்புரம், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை மற்றும் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம் பேட்டில் இருந்து இயக்கப்படும். 5 பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்வதற்கு போதிய அளவில் மாநகர பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
வழித்தட மாற்றம்
கோயம்பேடு பேருந்து நிலையத் தில் இருந்து அனைத்து இருக் கைகளும் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லா மல் மதுரவாயல் வழியாக இயக் கப்படும்.
தாம்பரம் மற்றும் பெருங்களத் தூர் பேருந்து நிலையங்களில் இருந்து முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் (கிளாம் பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத் தம் சென்று, அங்கு தாங்கள் முன் பதிவு செய்த நேரத்துக்கு பேருந்து களில் பயணம் செய்யலாம்.
கட்டுப்பாட்டு அறை
தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், பொதுமக்கள் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு வர ஏதுவாக, வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மொத்தம் 13,527 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள அல்லது புகார் தெரிவிப்பதற்கு 9445014450 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத் தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்க ஏற்பாடு செய்யயப்பட்டுள்ளது.
கார் மற்றும் இதர வாகனங் களில் செல்வோர் தாம்பரம், பெருங் களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து, திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்ய லாம். பொதுமக்கள் இதை கடைபிடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.