

அரை நூற்றாண்டைக் கடந்தும் ஆசிரியர் மீது மாணவர்கள் காட்டும் நெகிழ்ச்சியான அன்பை பார்க்க முடிந்தது விருகம்பாக்கம் ஆவிச்சி மேனிலைப்பள்ளி மாணவர்களின் சந்திப்பில்.
ஆவிச்சி மேனிலைப் பள்ளியின் 75 வயதான முன்னாள் தலைமை யாசிரியர் அமலதாஸுக்கு பாராட்டு செய்வதற்கென்றே அனைவரும் கூடினர்.
தனது 29-வது வயதில் விருகம் பாக்கம் ஆவிச்சி மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியராய் பொறுப் பேற்றவர் அமலதாஸ். மாணவர்களிடம் அன்பையும் கண்டிப்பையும் காட்டுவதோடு நில்லாமல், ஒவ்வொரு மாணவனின் கல்வி வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை காட்டிய ஆசிரியராய் கல்விப் பணிகளை செய்திருக்கிறார் என்பதை மாணவர்களின் ஈரம் கசியும் நினைவுப் பகிர்வுகளைக் கேட்டபோது, நம்மாலும் அறிய முடிந்தது.
1967-ம் ஆண்டுமுதல் அமலதாஸ் ஆசிரியரிடம் படித்த மாணவர்கள் இன்றைக்கு மருத்துவர், வங்கி மேலாளர், பொறியாளர், அரசியல் தலைவர், தொழில் அதிபர் என பல்வேறு உயர்ந்த பதவிகளில் இருப்பதை பெருமையோடு பகிர்ந்து கொண்டார்கள்.
ஏவிஎம் புரொடக்ஷனில் மேலாளராக பணிபுரிந்துவரும் கே.விஸ்வநாதன், “அமலதாஸ் சார் மாதிரி இன்னொரு அசிரியரைக் காண்பது அரிது. அவர் எங்களின் மீது காட்டியது கண்டிப்பு அல்ல, கனிவான அக்கறை என்பதே உண்மை” என்றார்.
ஐஓபி ஈக்காடுத்தாங்கல் கிளையின் மேலாளராக இருக்கும் என்.நரேந்திரகுமார் பேசும்போது, “எங்கள் அப்பா என்னைப் படிக்க வைக்க விரும்பவில்லை. அமலதாஸ் சார்தான் எங்க அப்பாக்கிட்டே பேசி, என்னைத் தொடர்ந்து படிக்க வச்சாரு. இன்னிக்கு நான் இந்த நிலையிலே இருக்கேன்னா, அதுக்கு காரணமே அமலதாஸ் சார்தான்” என்று சொல்லும்போதே கண்கள் பனிக்கின்றன.
முன்னாள் ஆசிரியருக்குப் பாராட்டு செய்யும் இந்த நிகழ்வை அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய ராமசாமி ஒருங்கினைத்தார்.
நிறைவாக, முன்னாள் தலைமையாசிரியர் அமலதாஸ் பேசும்போது, “என்னோட வாழ்வின் பயனை இன்றைக்குத்தான் நான் அடைந்திருக்கிறேன்” என்று கூறினார்.
எல்லா ஆசிரியர்களுமே இப்படி மாணவர்கள் நேசிக்கிற ஆசிரியராக இருந்துவிட்டால், கல்வியென்பது எப்போதும் இனிக்கும் கனியாகவே அமையும் என்பதை உணர்த்துவதாய் இந்நிகழ்வு அமைந்திருந்தது.