Published : 21 Oct 2019 08:42 PM
Last Updated : 21 Oct 2019 08:42 PM
தேனி
தேனி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மழை பாதிப்புகளை எதிர்கொள்ளவும், சரி செய்யவும் 43 இடங்களில் ஒருங்கிணைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் முதலே பெய்து வருகிறது. கேரள தமிழக எல்லையான லோயர்கேம்ப், கூடலூர், வெட்டுக்காடு, குமுளி, தேக்கடி மற்றும் கேரளா பகுதியல் பெய்துவரும் மழையினால் முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளான பெரியகுளம், சோத்துப்பாறை, போடி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, வராகநதி, கூவனூத்து, கொட்டக்குடி உள்ளிட்ட பல ஆறுகளில் நீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அரசரடி, வெள்ளிமலை பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் மூலவைகையிலும் தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்தை ரெட்அலர்ட் பகுதியாக அறிவித்துள்ளது. நாளை அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவக்கி உள்ளது. மாவட்டத்தின் 43 இடங்களில் ஒருங்கிணைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் குளம், கண்மாய் போன்றநீராதாரங்களுக்கு வரும் நீரின் அளவு கண்காணிக்கப்பட்டு உடைப்பு, விரிசல் போன்ற பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களின் கிராமங்களிலே தங்கி மழையின் தன்மையை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் வெள்ள பாதிப்பு தகவல்களை 24மணிநேரமும் 1077,1070 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைப்பதற்கான தற்காலிக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தீயணைப்பு, வருவாய், வேளாண், கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் யாரும் ஆற்றிற்குள் இறங்கி குளிக்கக் கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி வீரபாண்டியில் 48மிமீட்டரும் தேக்கடியில் 47, போடியில் 45மிமீட்டர் அளவிற்கு அதிகபட்ச மழையும், மாவட்டத்தில் சராசரியாக 22மிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் 126அடி நீர்மட்டம் உள்ளது. வினாடிக்கு 3ஆயிரத்து 169கனஅடிநீரும், ஆயிரத்து 400கனஅடிநீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது.மஞ்சளாறு அணையில் மொத்த உயரமான 57அடியில் 50அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வைகை அணையைப் பொறுத்தளவில் மொத்த உயரமான 71அடியில் தற்போது 62.5அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 684 கன அடியாகவும், வெளியேற்றம் 2ஆயிரத்து 90 கன அடியாகவும் உள்ளது.
ஆற்றுக்குப்பூட்டு:
தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையினால் முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே வீரபாண்டியில் உள்ள தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டதுடன், ஆற்றுப்பாதை இரும்பு கதவுகளால் மூடப்பட்டுள்ளது.