

நாங்குநேரி
நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முற்பட்டதாக கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார், சாலையில் நடந்த செல்லக்கூட எனக்கு உரிமை இல்லையா? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
நாங்குநேரி எம்.எல்.ஏ.,வாக இருந்த வசந்தகுமார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு கன்னியாகுமரி எம்.பி. ஆனார். இதனையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காலியான நாங்குநேரி தொகுதிக்கு இன்று (அக்.21) இடைத்தேர்தல் நடைபெற்றது.
நாங்குநேரி தொகுதியில் பெரியளவில் எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பிற்பகல் 3 மணியளவில், கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்தகுமார், ர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முற்பட்டதாக சர்ச்சை கிளம்பியது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கலுங்கடியில் தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளே நுழைய முயன்றதாக சர்ச்சைகள் கிளம்பின. இதனையடுத்து அவரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு வசந்தகுமார் மீது 143, 171 (எச்.ஐபிசி) ஆர்/டபிள்யு 123 ஆர்.சி என 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீஸார் இருநபர் ஜாமீனில் விடுவித்தனர்.
தன் மீதான நடவடிக்கை குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எம்.பி. வசந்தகுமார், "பாளையங்கோட்டையில் எனது வீடு உள்ளது. எனது வீட்டுக்குச் செல்வதற்காக நான் இவ்வழியாகக் காரில் வந்தேன். ஒரு எம்.பி.யான நான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்ற காரணத்தால் அந்த தொகுதியின் வழியாக சாலையில் நடந்து செல்லக்கூட உரிமை இல்லையா? ஆளுங்கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனாலேயே அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்" என்றார்.