Published : 21 Oct 2019 05:07 PM
Last Updated : 21 Oct 2019 05:07 PM

மதுரை மாநகராட்சி பள்ளிக் குழந்தைகள் 4,493 பேருக்கு ரத்தசோகை: குறைபாட்டை போக்க ‘எச்சிஎல்’ நிறுவன உதவியுடன் சிகிச்சைக்கு ஏற்பாடு

மதுரை

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 4,493 பேருக்கு ரத்தசோகையும், 3,061 பேருக்கு இரும்பு சத்து குறைபாடும், 2,248 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடும் இருப்பது மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த குறைபாட்டைப் போக்க மாநகராட்சி நிர்வாகம், ‘எச்சிஎல்’ நிறுனம் உதவியுடன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் உள்பட மொத்தம் 64 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் பெரும்பாலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அடித்தட்டு மக்களின் குழந்தைகளே படிக்கின்றனர். இந்த குழந்தைகளும், தனியார் பள்ளி குழந்தைகளைப் போல் படிக்க தற்போது அனைத்து பள்ளிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்வியில் சாதிக்க ரோபாட்டிக்ஸ் ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, 'நீட்' தேர்வு பயிற்சி மற்றும் விளையாட்டில் சிறந்து விளக்க ஹைடெக் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.

இப்படி மாநகராட்சிப் பள்ளி குழந்தைகளின் கல்வி, விளையாட்டில் அக்கறை கொடுத்துவந்த நிலையில் தற்போது அவர்கள் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டத் தொடங்கிவுள்ளது.

அதற்காக ‘எச்சிஎல்’ நிறுவனத்துடன் கைகோர்த்து, மருத்துவ நிபுணர்களை கொண்டு மாநகராட்சிப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 10,255 குழந்தைகளை மருத்துவப்பரிசோதனை செய்தனர்.

அதில், 1,016 மாணவர்களுக்கும், 3,477 மாணவிகளுக்கும் ரத்தசோகையும், 1,005 மாணவர்களுக்கு, 2,056 மாணவிகளுக்கும் இரும்புச் சத்து குறைபாடும் இருப்பது தெரியவந்துள்ளது.

1,215 மாணவர்களுக்கும், 1,033 மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதும் தெரிய வந்துள்ளது. மொத்தமே 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில் வெறும் 453 மாணவ, மாணவிகள் மட்டுமே முழு உடல் ஆரோக்கியமுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த குழந்தைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம், எச்சிஎல் நிறுவனம் உதவியுடன் தேவையான மருத்துவ வசதிகளையும், ஊட்டச்சத்து பொருட்களையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து எச்சிஎல் நிறுவன பவுண்டேஷன் இயக்குனர் நிதி புந்தீர் கூறுகையில், ‘‘மாநகராட்சிப்பள்ளி குழந்தைகளை ஆய்வு செய்து பார்த்தபோது, அவர்களுக்கு ரத்தசோகை அதிகமாக இருந்தது தெரியவந்தது. குறிப்பாக பெண் குழந்தைகளிடம் இந்த குறைபாடு அதிகமாக உள்ளது.

இதை சரி செய்வதற்கு தேவையான ஊட்டச்சத்துப் பொருட்கள், இரும்புச் சத்து மாத்திரைகள், விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். எந்த வகை உணவுகளை பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். தற்போது பள்ளி மாணவர்களிடம் மேற்கொண்டுள்ள இந்த விழிப்புணர்வை, பொதுமக்களுக்கும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளோம், ’’ என்றார்.

குறைபாட்டை போக்க என்ன செய்யலாம்?

மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் மருத்துவப்பிரிவு துறைத் தலைவர் டாக்டர் பாலசந்தர் கூறுகையில், ‘‘ரத்தசோகை ஏற்பட ஊட்டச்சத்து குறைபாடு, குடற்புழு தாக்கம் ஆகிய 2 முக்கிய காரணங்கள் உள்ளன.

இதில், குழந்தைகள் காய்கறிகள், கீரைகள் சாப்பிடுவதில்லை. ஏழை குழந்தைகளுக்கு அவை சாப்பிடக் கிடைப்பதில்லை. குடற்புழுக்கள் தாக்கம் இருந்தாலும் ரத்தசோகை வந்துவிடும். பெண் குழந்தைகளுக்கு இந்த குறைபாடு அதிகம் வர மாதவிடாய் காலத்தில் அதிகமான ரத்தப்போக்கு ஒரு காரணமாகும். இதற்கு இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது இந்த மாத்திரைகள், பள்ளிகளிலேயே தாராளமாக கொடுக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. பரிசோதனை செய்து வாங்கிக் கொள்ளலாம்.

ரத்தசோகையால் பள்ளிக் குழந்தைகளுக்கு அதிகமான உடல் சோர்வு ஏற்படும். அதனால், சரியாக படிக்க, விளையாட முடியாமல் கவனச் சிதறல் ஏற்படும். ஞாபசக்தி குறைபாடு ஏற்பட்டு கல்வியில் பின்தங்குவார்கள். சில நேரங்களில் மூச்சுத்தினறல்கூட ஏற்படலாம். கை, கால் மற்றும் முகம் வீங்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x