Published : 21 Oct 2019 04:52 PM
Last Updated : 21 Oct 2019 04:52 PM

ராமநாதபுரம் அருகே கமுதியில் 3000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குண்டாற்றின் கரையில் உள்ள நரசிங்கம்பட்டியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 3000 ஆண்டுகள் பழமையானவை.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குண்டாற்றங்கரையில் சிலர் குழி தோண்டியுள்ளனர். அதிலே முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மூலம் இதை அறிந்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கமுதி ஒருங்கிணைப்பாளர் மு.வெள்ளைப்பாண்டியன், அமைப்பின் தலைவர் வே.ராஜகுருவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியை ஆய்வு செய்த பின் வே.ராஜகுரு கூறியதாவது:

கமுதி அருகே குண்டாற்றின் கிழக்குக் கரையில் சரளை மண் மற்றும் பாறைகள் உள்ள ஒரு மேட்டுப்பகுதியாக உள்ள இவ்வூரின் ஒரு பகுதியில், புதைந்தநிலையில் இரு முதுமக்கள் தாழிகள் உள்ளன. இதன் மேற்பகுதிகள் உடைந்துள்ளன. இதன் உள்ளே கருப்பு சிவப்பு வண்ணத்திலான மெல்லிய, தடித்த பானைகளின் ஓடுகள், உடைந்த கல் வளையம் ஆகியவை இருந்துள்ளன.

ஒரு முதுமக்கள் தாழி 78 செ.மீ. விட்டத்தில் 1 இஞ்ச் தடிமனில் உள்ளது. மற்றொன்று அளவில் இதைவிடச் சிறியதாக உள்ளது. ஒரு தாழியின் உடைந்த ஓட்டின் வெளிப்பகுதியில் தாய் தெய்வம் போன்ற குறியீடு காணப்படுகிறது.

மனிதன் இறந்தபின் மீண்டும் தாயின் கருவறைக்குச் சென்று பிறக்கிறான் என ஆதிமனிதன் நம்பியதால் தாழிகள் நடுவில் அகன்று கருவுற்ற தாயின் வயிறு போன்று அமைக்கப்படுகிறது.

இக்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டுவிடுவார்கள். அதை நரி, கழுகு போன்றவை இரையாய் கொண்டபின் அங்கு கிடக்கும் எலும்புகளை சேகரித்து, அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களையும், தானியங்களையும் உள்ளே வைத்து மூடி V வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்வார்கள். பிற்காலத்தில் தாழிக்குள் உடலை வைத்து அடக்கம் செய்யும் முறை இருந்துள்ளது.

மலைப்பகுதிகளில் காணப்படும் பெருங்கற்படைச் சின்னங்களை விட சமவெளிப் பகுதிகளில் உள்ள முதுமக்கள் தாழிகள் காலத்தால் முந்தியவை என்பதால் இவை 3000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை எனலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x