Published : 21 Oct 2019 03:16 PM
Last Updated : 21 Oct 2019 03:16 PM

தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்; அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு; தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலியுறுத்தல்

சென்னை

தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு ஆகிய பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (அக்.21) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவது கவலை அளிக்கிறது. அசோக் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி திவ்யதர்ஷினி, பெரியமேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் அரவிந்த், புழலைச் சேர்ந்த 7 வயது சிறுமி அக்ஷிதா ஆகிய மூன்று குழந்தைகள் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு பலி ஆகியுள்ள துயரச் செய்திகள் வெளிவந்துள்ளன.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொதுமருத்துவமனை உள்ளிட்டவற்றில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் மிக அதிக அளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட187 பேரில் 37 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் 3,400 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாகவும், அதிலும் 10 மாவட்டங்களில் தீவிரமான பாதிப்பு இருப்பதால் சுகாதாரத்துறையினர் தடுப்புக் கண்காணிப்பு பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக, தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேர் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகி உள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் பதில் அளித்துள்ள தமிழக அரசு, டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்காக தமிழகம் முழுவதும் 125 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக தனியாக வார்டுகள் இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், அரசு பொது மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதமும் தொய்வும் ஏற்பட்டு வருகிறது.

எனவே தமிழக அரசு டெங்கு காய்ச்சலின் தீவிரத்தை உணர்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசுப் பொது மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போதுமான அளவுக்கு இச்சிகிச்சைப் பிரிவில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அரசு மருத்துவர்கள் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருப்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வு, பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிடக் கலந்தாய்வை நடைமுறைப்படுத்துதல், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019 ஆகஸ்டு 23 முதல் நான்கு நாட்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் 6 பேர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கிய சூழலில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில், முதலில் அரசு மருத்துவர்கள் கோரிக்கைக்காக ஆய்வு செய்திட சுகாதார திட்டப் பணிகள் இயக்குநர் செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும், ஆய்வு அறிக்கை வந்தபின்னர் கோரிக்கைகளை அரசு விரைவில் நடைமுறைப்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதன்பின்னர் தமிழக அரசு, அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கிடப்பில் போட்டுவிட்டதால், அரசு மருத்துவர்கள் அக்டோபர் 25 முதல் போராட்டக் களத்தில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். உடனடியாக அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x