

சென்னை
அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை, வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக தென் மாவட்டங்களில் கனமழையும், பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“தற்போது தென் தமிழகத்தில் குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தென்மேற்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக கன்னியாகுமரி குழித்துறையில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வங்ககடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2, 3 தினங்களில் மழை படிப்படியாக தீவிரமடையும். வங்கக்கடல், குமரி கடல் பகுதியில் மீனவர்கள் நாளை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்”.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.