

புதுச்சேரி
சாய்பாபா படத்துடன் டோக்கன் விநியோகம் ஒருபுறமும், இலவச கேபிள், வாக்குக்குப் பணம் மறுபுறமும் என கட்சிகள் முயற்சிப்பது தொடர்பாக காமராஜர் நகர் இடைத்தேர்தல் மாறி மாறி புகார் மயமானது. தேர்தல் துறையும் இதைத் தடுக்க தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று (அக்.21) நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக புவனேஸ்வரன் உட்பட 9 பேர் களத்தில் உள்ளனர். நேரடிப் போட்டி இவர்களுக்கு இடையே நிலவுகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஜான்குமார். அதையடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் வேளையில் நாராயணசாமி முதல்வராகத் தேர்வானார். அதையடுத்து அவர் போட்டியிட நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்தொகுதியில் நாராயணசாமி வென்றார். அதைத்தொடர்ந்து அமைச்சருக்கு இணையான டெல்லி பிரதிநிதி பதவியும் ஜான்குமாருக்குத் தரப்பட்டது. ரியல் எஸ்டேட், கேபிள் டிவி, சுற்றுலா ஏற்பாட்டாளர் என பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கெனவே நெல்லித்தோப்பு தொகுதியில் நிலை நிறுத்திக்கொள்ள பல்வேறு முயற்சிகளை ஜான்குமார் தொடர்ந்து செய்து வந்தார். வரவுள்ள 2021-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நெல்லித்தோப்பில் ஜான்குமார் போட்டியிடும் முடிவிலேயே இருந்தார். இச்சூழலில் டெல்லி பிரதிநிதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காமராஜர் நகர் தொகுதியில் வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதற்கு முழு முயற்சியும் முதல்வர் நாராயணசாமி என்று காங்கிரஸ் தரப்பினர் வெளிப்படையாகவே பேசினர். காங்கிரஸ் தரப்பில் தொடர் பிரச்சாரத்தில் முதல்வர் நாராயணசாமி அதிக அளவு கவனம் செலுத்தினார்.
என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனும் ரியல் எஸ்டேட் அதிபர். இவரும் இத்தொகுதிக்கு புதுமுகம்தான். இருந்தாலும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இத்தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிமுக தரப்பிலும் சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன் உள்ளிட்டோரும் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கினர்.
மொத்த வாக்குகள் 35 ஆயிரத்து 9 என்பதால் பிரச்சாரத்துக்குப் பிறகு பரிசுகள், பணம் என தொகுதி களைகட்டத் தொடங்கியது.
ஜான்குமார் குழுமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.கே.கேபிள் டிவி நிறுவனத்தினர் இத்தொகுதியில் இலவச கேபிள் வழங்கியதைக் கண்டறிந்து மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுள்ளதாக தேர்தல் துறை உயர் அதிகாரிகள் உறுதி செய்தனர். அத்துடன் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக அதிமுகவைச் சேர்ந்த ஐந்து பேரை பறக்கும் படையினர் பிடித்தனர். அவர்களிடம் ரூ.1 லட்சம் ரொக்கம், ரூ.25 ஆயிரம் மது பாட்டில்கள், நோட்டீஸ்கள் பறிமுதல் செய்ததாகத் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் பலவித கண்காணிப்புகளை மீறி பல இடங்களில் பண விநியோகம் நடந்ததாக தொகுதியில் இருந்தோர் தெரிவிக்கத் தொடங்கினர். நேரடியாக உயர் அதிகாரிகள் இதைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்தனர்.
இந்நிலையில் தேர்தல் நாளான இன்று தொகுதியே களைகட்டியது. ஆளும்கட்சி டோக்கன் தருவதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து தேர்தல் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஏராளமான டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 'முடியாது என்பது மூட நம்பிக்கை, முடியுமா என்பது அவநம்பிக்கை, முடியும் என்பது தன்னம்பிக்கை' என்ற வாசகங்களுடன் சாய்பாபா படத்துடன் அச்சிடப்பட்டிருந்தது. இறுதியில் உள்ள 'கை' என்ற வாசகம் தனித்துத் தெரியும்படியும், வண்ணம் பூசியும் தந்திருந்தனர்.
சாய்பாபா படம் பொறிக்கப்பட்ட டோக்கன்
இதேபோல் ஆளுங்கட்சியான காங்கிரஸும், என்.ஆர்.காங்கிரஸார் பணம் விநியோகிப்பதாக புகார் தர தொகுதி முழுக்க தொடர் பதற்றம் நிலவுகிறது. தொடர் கண்காணிப்பிலும், முறைகேடுகளைத் தடுக்கும் முயற்சியிலும் தேர்தல் துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
செ.ஞானபிரகாஷ்