

புதுச்சேரி
புதுச்சேரி காமராஜர் நகரில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 28.17% வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பாக பிரவீணா, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பாக வெற்றிச்செல்வன் உட்பட 9 பேர் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு இன்று (அக்.21) நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் 32 வாக்குச்சாவடிகளிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பதற்றமான 7 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 35,009. 17,047 ஆண் வாக்காளர்களும், 17,961 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரம் இத்தொகுதியில் அமைந்துள்ள 32 வாக்குச்சாவடிகளிலும் உள்ளன. தேர்தலுக்காக மொத்தம் 158 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மழையிலும் பலர் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது.
சத்யா சிறப்புப் பள்ளியில் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் ஊழியர்களைக் கொண்ட வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். பெண்களே நடத்தும் இந்த வாக்குச்சாவடியில் 1,460 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 752, ஆண்கள் 708 பேரும் உள்ளனர். அதனால் இந்த வாக்குச்சாவடி பெண்களே நடத்தும் வாக்குச்சாவடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 28.17% வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீணா கட்சித் துண்டை அணிந்து வாக்குச்சாவடிக்குள் வந்தார். இதற்கு முகவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் துண்டை எடுத்துவிட்டார்.
செ.ஞானபிரகாஷ்