

புதுச்சேரி
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு சாய்பாபா படம் போட்ட டோக்கன் வழங்குவதாக என்.ஆர்.காங். வேட்பாளர் புவனேஸ்வரன் புகார் அளித்துள்ளார். தீபாவளியன்று 5000 ரூபாய்க்கான பரிசு தர காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்.21) நடைபெற்று வரும் நிலையில் சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்படுவதாக தேர்தல் துறைக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் அதிகாரி மன்சூர் தலைமையிலான அதிகாரிகள், அப்பகுதியில் இருந்த சலூனில் சோதனை செய்தனர். அப்போது சாய்பாபா படம் அச்சிடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட டோக்கன்கள், வாக்காளர் பட்டியல், காங்கிரஸ் கட்சிக் கொடி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் டோக்கன் வைத்து இருந்த 3 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் 5000 ரூபாய்க்கான டோக்கன் வழங்கியதாக எதிர்ச்கட்சிகள் புகாரையடுத்து 4 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் 5000 ரூபாய்க்கான டோக்கன் வழங்குவதாக புகார் கூறி, கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பத்தில் அதிமுக எம்எல்ஏ அன்பழகன், என்.ஆர்.காங். வேட்பாளர் புவனேஸ்வரன் தலைமையில் ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே, சாரம் பாலாஜி நகரில் வாக்குச் சீட்டு, வாக்காளர் பட்டியல் மற்றும் 27,500 ரூபாயுடன் லாஸ்பேட்டை பவுன் பேட்டையைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த வேலு என்பவரைக் கைது செய்து, தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
செ.ஞானபிரகாஷ்