

தமிழகம் தனது அன்பு மகனை இழந்துவிட்டது என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியும், தமிழகத்தின் அன்பு மகனுமான அப்துல் கலாம் மறைவு என்னை மிகுந்த துயருக்கு ஆளாக்கி உள்ளது.
சுதந்திர இந்தியாவில் கலாம் மிகப்பெரிய தலைவர். எளிமையான குடும்பத்தில் பிறந்த கலாம் தனது கடின உழைப்பாலும், அறிவுக்கூர்மையால் வியத்தகு உயரத்தை அடைந்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பு போற்றத்தக்கது. ஏவுகணை, அணுசக்தி திட்டங்களில் அவரது ஈடுபாடு அனைவரும் அறிந்ததே.
தொலைநோக்கு பார்வை கொண்ட விஞ்ஞானியாக அவர் இந்தியாவை உலக அரங்கில் பெருமிதம் கொள்ளச் செய்தார்.
இந்த நாட்டு மக்கள் குறிப்பாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அவர் மிகப் பெரிய உந்து சக்தியாக விளங்கியிருக்கிறார். இளைஞர்களின் அடையாளம் ஆனார். எளிமையான வாழ்க்கைமுறையால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அவர் ஒரு சிறந்த தேச பக்தர். கிராமப்புற மக்களுக்கும் பயன்படும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே அவரது இலக்காக இருந்தது.
அத்தகைய மாமனிதரின் மறைவின் துக்கத்தை மக்களுடன் இணைந்து நான் அனுசரிக்கிறேன்" இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.