

சென்னை
மாநகர பேருந்தில் பயணச் சீட்டு சில்லறை பிரச்சினையால், இளம்பெண் ஒருவர் கியரை பிடித்து இழுத்து சாலை நடுவே பேருந்தை நிறுத்தியதால் பரபரப்பான சூழல் உருவானது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்து வில்லிவாக்கம் செல்லும் ‘27டி’ மாநகரப் பேருந்தில் நொச்சிக் குப்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் ஏறியுள்ளார். அந்த பெண்ணிடம் ரூ.20 மட்டுமே பணம் இருந்துள்ளது. நண்பரிடம் பணம் இல்லை.
இந்நிலையில், இருவருக்கும் பயணச் சீட்டுக்கான கட்டணம் ரூ.30 என்பதை அறிந்ததும், பேருந்தில் இருந்து இறங்கிக் கொள்வதாக நண்பர் கூறியுள்ளார். ஆனால், பேருந்தின் கதவை திறக்க மறுத்த நடத்துநர், அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய நண்பர், அருகே உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து மீண்டும் அதே பேருந்தில் ஏறினார். டிக்கெட் கட்டணத்துக் காக ரூ.500 நோட்டை நடத்துநரிடம் நீட்டியுள்ளார். இதில் கோப மடைந்த நடத்துநர் அவர்களை மீண்டும் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கியரை பிடித்து இழுத்து பேருந்தை நிறுத்தினார் அந்த பெண். கியரை அவர் கெட்டியாக பிடித்துக்கொண்ட தால், ஓட்டுநரால் பேருந்தை இயக்க முடியவில்லை.
போக்குவரத்து மிகுந்த சாலையில் நடுவழியில் பேருந்து நின்றதால், பின்னால் வாகனங்கள் தேங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பரபரப் பான சூழல் உருவானது.
போக்குவரத்து போலீஸார் விரைந்து வந்து, பேருந்தை சாலை யோரம் நிறுத்துமாறு அறிவுறுத்தி னர். பிரச்சினை குறித்து இரு தரப்பினரிடமும் விசாரித்தனர்.
பயணச்சீட்டுக்கு உரிய சில்லறை இல்லாமல் பேருந்தில் ஏறியதால் சத்தம் போட்டதாகவும், இழிவாக எதுவும் பேசவில்லை என்றும் போலீஸாரிடம் நடத்துநர் விளக்கம் அளித்தார். பின்னர், இரு தரப்பினரையும் போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.