

உடலுக்கு வடிவத்தையும், வலிமை யையும் அளிப்பதுடன், மூளை, இதயம், நுரையீரல் போன்ற உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் எலும்புகள்தான். எலும்பு மஜ்ஜையில்தான் ரத்தத்தின் சிவப்பு அணுக்கள் உருவாகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எலும்புகளை பாதிக்கும் எலும்பு அடர்த்தி குறைவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டு தோறும் அக்டோபர் 20-ம் தேதி World Osteoporosis Day கடைப்பிடிக் கப்படுகிறது. 50 வயதுக்கு மேல் எலும்புகள் வலுவிழப்பதால், பெண்களில் 3-ல் ஒருவருக்கும், ஆண்களில் 5-ல் ஒருவருக்கும் எலும்பு முறிவு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் 5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எலும்புகள் வலுவிழப்புக்கு இளைஞர்களும் ஆளாகி வருவதாக கூறுகிறார், கோவை அரசு மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் செ.வெற்றிவேல்செழியன்.
அவர் மேலும் கூறும்போது, “ஓடி, ஆடி வேலை செய்யாமல் அறைகளுக்குள் அடைபட்டு, உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வோரின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. எங்கு சென்றா லும் வாகனங்கள் என்றாகிவிட்ட தால், நடப்பதும் குறைந்துவிட்டது. எலும்புகள், மூட்டுகள் வலுவாக இருக்க ‘வைட்டமின் டி’ அவசியம். மேலை நாடுகளில் ‘வைட்டமின் டி’ குறைபாட்டால் பலர் பாதிக்கப்படு கிறார்கள் என்றால், அதற்கு சூரிய ஒளி குறைவாக இருப்பதும் ஒரு காரணம். இங்கு ஆண்டு முழுவதும் சூரிய ஒளி கிடைக்கிறது. ஆனால், அதை உடலில் பெறத் தவறுகிறோம். இதனால், எலும்பு அடர்த்தி குறைவு இளைஞர்களை பாதிக்கிறது.
கண்டறியும் பரிசோதனைகள்
ஆண்களுக்கு டெஸ்டோஸ் டீரான் ஹார்மோன் குறைவதாலும், பெண்களுக்கு மாதவிலக்கு நின் றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதாலும் எலும்பு பலவீனம் அடைகிறது. எலும்பு அடர்த்தி குறைவாக உள்ளதற்கு, அறிகுறிகள் ஏதும் வெளியே தெரியாது. வழுக்கி விழுந்தால்கூட எலும்பு முறிந்துவிடும். எனவேதான், இதை ‘சைலண்ட் கில்லர்’ என்கிறோம். வலி மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டபிறகு பரிசோதனை மேற்கொள்ளும்போதுதான், பலர் அடர்த்தி குறைவை தெரிந்துகொள்கின்றனர்.
எலும்புகளின் அடர்த்தியை கண்டறிய எக்ஸ்ரே கதிரை கொண்டு, டெக்ஸா ஸ்கேன் (Dexa scan) பரிசோதனை செய்து கொள்ளலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதை செய்து கொள்ளலாம். மேலும், எலும்பின் அடர்த்தியை (Bone Mineral Density BMD) தெரிந்துகொள்ள கால் பாதத்தில் Quantitative ultrasound ஸ்கேன் செய்துகொள்ளலாம்.
இந்த பரிசோதனைகளின் முடிவில் எலும்பின் அடர்த்தியை குறிக்கும் டி-ஸ்கோர், குறைந்தபட்சம் -1 வரை இருக்கலாம். அதற்கு கீழ் -1 முதல் -2.5 வரை இருந்தால், அது எலும்பு அடர்த்தி குறைவின் முதல்நிலை. அதையும்விட குறைந்தால், ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே, எலும்பின் திண்ம அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
தீர்வு என்ன?
மேற்கத்திய உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து, கால்சியம் சத்து நிறைந்த பால், தயிர், பால்சார்ந்த உணவுகள், காய்கறிகள், கீரை வகைகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 2 கி.மீ. நடைபயிற்சி, 10 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்ய வேண்டும். மூட்டுகளை நீட்டி மடக்கும்போது தசைகளுக்கும், தசைநார்களின் வலுகூடும். நடைபயிற்சி மேற்கொள் வதால், எலும்புகள் வலுவிழக்கா மல் இருக்கும். வைட்டமின் டி கிடைக்க, இளம் வெயில் உடலில் படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
நிருபர் சக்திவேல்