Published : 20 Oct 2019 08:11 PM
Last Updated : 20 Oct 2019 08:11 PM

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு; பலத்த பாதுகாப்பு

சென்னை

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு அளவில் செய்துள்ளது. இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக - திமுக இடையேயும், நாங்குநேரி தொகுதியில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. இதுபோலவே புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் என்ஆர் காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன், உள்ளிட்ட 23 பேர் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, தமிழ்பேரரசு கட்சி சார்பில் இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

இந்த தொகுதிகளில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக சார்பில் அமைச்சர் கள், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் இந்த தொகுதிகளில் முகாமிட்டு களப்பணியாற்றி வந்தனர். நேற்று பிரச்சாரத்துக்கு கடைசி நாள் என்பதால் பிரதான கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

இந்த இரு தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இடைத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x