Published : 20 Oct 2019 01:57 PM
Last Updated : 20 Oct 2019 01:57 PM

நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை

தமிழகத்தில் மேலும் 3 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாத மாவட்டங்களில் 3 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் மருத்துவக் கல்வியை பரவலாக்குவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

இந்தியாவின் பின்தங்கிய பகுதிகளில் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போவதாக கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்தது. அவற்றில் குறைந்தது 10 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 30-ஆம் தேதி மத்திய அரசை வலியுறுத்தியிருந்தேன். தமிழக அரசின் சார்பிலும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய கல்லூரிகளுக்கான இடம் தேர்வு, மதிப்பீடு தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் புதிய அமைக்கப்படவுள்ள மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் உருவாக்கப்படவுள்ளன. தமிழகத்தில் இப்போது இரு வகைகளில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,600 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. மத்திய அரசு சார்பில் அமைக்கப்படும் 6 கல்லூரிகளில் 900 இடங்கள், மாநில அரசு சார்பில் அமைக்கப்படவுள்ள 3 கல்லூரிகளில் 450 இடங்கள் ஆகியவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 4,950 இடங்கள் இருக்கும். இதன்மூலம் நாட்டில் அதிக மருத்துவ இடங்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருவதன் முக்கிய நோக்கமே மருத்துவம் தேவைப் படும் நோயாளிகள் மிகக் குறைந்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது தான். நாகை மாவட்டத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி நாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்டால் இந்த நோக்கம் நிறைவேறாது. ஏனெனில், திருவாரூரில் ஏற்கனவே மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. திருவாரூருக்கும், நாகப்பட்டினத்திற்கும் 23 கி.மீ தொலைவு மட்டுமே இடைவெளி எனும் நிலையில், புதிய கல்லூரியை நாகை மாவட்டத்தில் வேறு இடத்தில் அமைப்பதே சரியாக இருக்கும்.

நாகை மாவட்டத்தின் முக்கிய நகரமான மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. நானே பலமுறை அந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறேன். இதற்காக பா.ம.க. சார்பில் பல போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு 60 கிலோ மீட்டர் தொலைவு என்பதால் நோயாளிகளை அங்கு கொண்டு செல்வதில் பல சிரமங்கள் ஏற்படும். எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x