Published : 20 Oct 2019 10:37 AM
Last Updated : 20 Oct 2019 10:37 AM

என்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி கொடுக்கிறேன்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

கோவை

என்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் நின்று பதிலடி கொடுக்கிறேன் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழா நேற்று நடைபெற்றது. குழுமத் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, தேசிய கயறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கே.எம்.சி.ஹெச். மருத்துவக் குழுமத் தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி, பி.பி.ஜி. குழும அறங்காவலர் அக்சய் தங்கவேலு, தாளாளர் சாந்தி தங்கவேலு உள்ளிட்டோர் பேசினர்.

சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங் கேற்று, கல்வி, கலை, விளையாட்டுகளில் சிறந்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும், பல்துறை சாதனையாளர்கள், டாக்டர்களுக்கு விருதுகளும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: தெலங் கானா ஆளுநராக பொறுப்பேற்றாலும், தமிழ் மண்ணுக்கு நன்றியுடையவளாக இருப்பேன். இரு மாநிலங்களுக்கிடையே பாலமாக செயல்படுவேன். மேதகு ஆளுநர் என்று அழைக்கப்படுவதைக் காட்டிலும், சகோதரி என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன். கோவையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆளுநராக பதவியேற்ற பின்னர், கொங்கு மண்டலத்தில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி கோவையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நான் உட்பட பலரும் மருத்துவர்கள்.

மாணவர்கள் நன்கு படித்து டாக்டர் பட்டம் பெற வேண்டும். அதேசமயம், அரசியல் கட்சியில் சேர்ந்தாலே டாக்டர் பட்டம் கிடைத்துவிடும் என்று சிலர் கருதுகிறார்கள். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கடின உழைப்பு இருந்தால், டாக்டராக மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியராக, ஏன் ஆளுநராக கூட உயரலாம்.

மருத்துவர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டுமெனில், செவிலியர், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் ஒத்துழைப்பு அவசியம். அந்த வகையில், மருத்துவம் சார்ந்த கல்வியை பயில்வோருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. எனது உயரத்தை, நிறத்தை, ஏன் முடியைக் கூட கிண்டல் செய்தார்கள். ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாது, என் பாதையில் தொடர்ந்து பயணித்தேன்.

ஆணாதிக்கம் மிகுந்த அரசியல் களத்தில், பல சவால்களை சந்தித்தேன். என்னை கிண்டல் செய்தவர்களை, தற்போது மேடையில் நின்றபடி நான் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன். வாழ்வில் உயர குறிக்கோளை இலக்காகக் கொண்டு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்புடன் செயல்பட வேண்டும்.

பாடப் புத்தக கல்வியுடன், கலை, இலக்கியம் உள்ளிட்ட மற்ற விஷயங்களையும் கற்றுக்கொள்ளுங்கள். ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. சக மாணவ, மாணவிகளுடன் தூய்மையான நட்புடன் பழகுங்கள். பெண் அதிக அளவில் உயர் கல்வி கற்க முன்வருவது வரவேற்கத்தக்கது. 10 ஆயிரம் ஆண்கள் உயர் கல்வி கற்றபோது, 25 பெண்களே உயர்கல்வி கற்ற சூழல் இருந்தபோது, தனது மகளிர் பத்திரிகைக்கு 'சக்கரவர்த்தினி' என்று பெயர் சூட்டினார் பாரதியார். யாராக இருந்தாலும், கடின உழைப்பு நல்ல பலனைக் கொடுக்கும். எந்த உயரத்தை அடைந்தாலும், பெற்றோரையும், ஆசிரியர்களையும் மறந்துவிடாதீர்கள்.

இளைய தலைமுறை அரசியலை முழுமையாக தெரிந்துகொண்டு, நேர்மையான முறையில் அதில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் தவறாது வாக்களித்து, 100 சதவீதம் வாக்குகள் பதிவாக ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x