

மாமல்லபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாமல்ல புரம் பகுதியில் நடைபெற்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்குப் பிறகு புதுப்பொலிவு பெற்ற மாமல்லபுரம் மேலும் பிரபல மடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரை இலவசமாக அனுமதிக் கப்பட்ட வெண்ணெய் உருண்டை பாறை பகுதி கட்டண வரையறைக் குள் வந்துள்ளது. இதனால் சுற் றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
மாமல்லபுரத்தில் உலகப் புகழ்ப் பெற்ற கலைச் சின்னங்கள் உள்ளன. இந்த இடத்தில் சமீபத்தில் இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக் கொண்டனர். இவர்கள் சந்திப்பை யொட்டி மாமல்லபுரம் புதுப் பொலிவு பெற்றது. இவர்கள் இருவரும் இணைந்து வெண்ணெய் உருண்டைப் பாறை பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படம் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் என அனைத்திலும் பிரபலமானது.
இதைத் தொடர்ந்து வெண் ணெய் உருண்டைப் பாறை பகு தியை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய பகுதிகளை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ரூ.40 கட்டணம் வசூலிக் கப்பட்டு வருகிறது. வெளிநாட்டின ருக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மற்ற இடங் களான அர்ஜுனன் தபசு, வெண் ணெய் உருண்டைப் பாறை ஆகிய இடங்களை இதுவரையில் சுற்றுலா பயணிகள் கட்டணம் இல்லாமல் தான் கண்டு ரசித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது ரூ.40 கட்டணம் என்கிற வரையறைக் குள் வெண்ணெய் உருண்டை பாறை பகுதியையும் கொண்டு வந்துள்ளனர். அதாவது ரூ.40 கட்ட ணம் செலுத்தினால் கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற் றோடு வெண்ணெய் உருண்டைப் பாறை பகுதியையும் அருகில் சென்று கண்டு ரசிக்கலாம். கட்டணம் செலுத்தாமல் வெண்ணெய் உருண் டை பாறையை கண்டு ரசிக்க விரும்பினால் கம்பி வேலிக்கு வெளியே தூரத்தில் இருந்துதான் பார்க்க முடியும். அருகில் சென்று சுற்றிப் பார்க்க முடியாது.
இதற்காக வெண்ணெய் உருண்டை பாறை பகுதியில் தனியாக ஒரு நுழைச் சீட்டு வழங்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் ஒரே ஒரு நுழைவுச் சீட்டைக் கொண்டு, கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற்றோடு வெண்ணெய் உருண்டை பாறையையும் சுற்றிப் பார்க்கலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகளில் சிலர் அமைதியாக சென்றனர். ஆனால் இதுவரையில் இலவசமாக இருந்த இடத்தை கட்டண வரையறைக்குள் கொண்டு வந்ததற்கு சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, “விடுமுறை நாட்களிலும், விழா நாட்களிலும் நாங்கள் வெண்ணெய் உருண்டை பாறைக்கு குடும்பம் குடும்பமாக வந்து அமர்ந்து மகிழ்ச்சியாக இருந்துவிட்டுச் செல்வது வழக்கம். இனிமேல் நாங்கள் கட்டணம் செலுத்தித்தான் உள்ளே நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பிறகுதான் வெண்ணெய் உருண்டைப் பாறையை சுற்றிப் பார்க்க கட்டண வசூல் செய்கின்றனர். இந்த கட்டண வசூலை ரத்து செய்ய வேண்டும்” என்றனர். இதுகுறித்து அவர்கள் தொல்லியல் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தொல்லியல் துறை யின் மாமல்லபுரம் பொறுப்பு அதி காரி சரவணனிடம் கேட்டபோது, “வெண்ணெய் உருண்டை பாறை பகுதிக்கு தனியாக ஏதும் கட்ட ணம் வசூலிக்கவில்லை. ஏற் கெனவே இருக்கும் அறிவிப்பின் படி மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து கலைச் சின்னங்களை யும் பார்ப்பதற்கான தொகுப்பு கட்ட ணம்தான் ரூ.40 வசூலிக்கப்படு கிறது. ஏற்கெனவே வெண்ணெய் உருண்டை பாறை பகுதி கட்டண வரையறைக்குள் இல்லாமல் இருந்தது. தற்போது முறைப்படுத்தி வரையறைக்குள் கொண்டு வந்துள்ளோம். இப்போது அந்தப் பகுதியில் புதுப்பொலிவுடன் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இரவு 9 மணிவரை அங்கு விளக்குகள் எரிய வைத்துள்ளோம் என்றார்.