Published : 20 Oct 2019 08:28 AM
Last Updated : 20 Oct 2019 08:28 AM

எம்பிபிஎஸ் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதித்த 2 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தேர்வுகள் நடத்த தடை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நடவடிக்கை

சென்னை

எம்பிபிஎஸ் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதித்த தனியார் மருத்துவக் கல்லூரிகள், தேர்வுகள் நடத்த தடைவிதித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் கைது செய்யப் பட்டார். இதேபோல் பல மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பது தெரியவந்து, அவர்கள் மீது நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கான தேர்வுகளில், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி அனுமதியுடன் மாணவர்கள் தேர்வு அறையில் காப்பி அடித்த சம் பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக அறிவிப்பின்படி கடந்த ஆகஸ்ட் மாதம் எம்பிபிஎஸ் படிப்புக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்த சில நாட்களில் பல்கலைக்கழகத்துக்கு வந்த புகார் மனுவில், சென்னை அருகே உள்ள மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்தக் கல்லூரி மீது விசாரணை நடத்த தேர்வு ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.

தேர்வு அறையில் பொருத்தப்பட்டி ருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தேர்வின் சமயத்தில், இரண்டாம் ஆண்டு படிக்கும் 25 மாணவர்கள், மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவர் மற்றும் இறுதி ஆண்டு படிக்கும் 15 மாணவர்கள் என மொத்தம் 41 மாணவர்கள் தேர்வு அறைகளில் அங்கும் இங்குமாக அலைந்து சென்று, புத்தகத்தைப் பார்த்து ஒருவர் ஒருவராக காப்பி அடிக்கும் காட்சிகள், துண்டு சீட்டுகள் மற்றும் விடைத்தாள்களை மாற்றிக்கொள்ளும் காட்சிகள் பதிவாகி யிருந்தன.

இதேபோல் மற்றொரு தனியார் மருத்துவக் கல்லூரியின் தேர்வு அறையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவில், தேர்வு எழுதும் மாணவர் அருகில் செல்லும் தேர்வு அறையின் கண்காணிப்பாளர் மாணவருக்கு கேள்விக்கு பதில் சொல்வது போன்ற காட்சி இருந்துள்ளது.

இதையடுத்து, தேர்வு விதிகளின்படி செயல்படாமல், தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதித்ததற்காக 2 மருத் துவக் கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் தேர்வு ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் பிறப்பித்துள்ள உத்தரவில், “சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி வரும் நவம்பர் மாதம் முதல் 3 ஆண்டுகளுக்கு எழுத்து, செய்முறை, பயிற்சி தேர்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. காப்பி அடித்த மாணவர்கள் அதே பாடத்தை 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் எழுத வேண்டும்.

இதேபோல், மற்றொரு தனியார் மருத்துவக் கல்லூரி நவம்பர் மாதம் முதல் ஓர் ஆண்டுக்கு எழுத்து, செய் முறை, பயிற்சி தேர்வுகளை நடத்து வதற்கு தடை விதிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x