2 மண்டலங்களில் 24 மணி நேரமும் இயங்கும் 2  சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் சார்பில் வளசரவாக்கம் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் உள்ள நகர்ப்புற சமுதாய நல வாழ்வு மையங்களில் 100 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு தனிக்காய்ச்சல் வார்டுகள் நாளைமுதல் தொடங்கப்பட உள்ளது என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் கீழ் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களும், 15 நகர சமுதாய நல வாழ்வு மையங்களும் மற்றும் 3 (24 / 7) மகப்பேறு மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றது. இம்மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், அனைத்து வகை காய்ச்சல்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதைத்தவிர, கர்ப்பக்கால பரிசோதனை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுதல், கர்ப்பக்கால முன் சிகிச்சை/பின் சிகிச்சை, தொற்றும் மற்றும் தொற்றா நோய்க்கான சிகிச்சை, எச்.ஐ.வி. ஆலோசனை, ஆய்வுக் கூட பரிசோதனைகள், அல்ட்ராசோனோகிராம் பரிசோதனை (ஸ்கேன்), காசநோய்க்கான பரிசோதனை, 30 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை வாயில் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தல், இரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி கண்டறிந்து தொடர் சிகிச்சை அளித்தல் மற்றும் மேற்கண்ட சிகிச்சைகளோடு 15 நகர சமுதாய நல வாழ்வு மையங்களிலும், 3 (24/7) மகப்பேறு மருத்துவமனைகளில் சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை பிரசவம் மற்றும் தற்காலிக/நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சைகள் போன்ற மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகிறது.

மேலும் தற்பொழுது பொதுமக்கள் நலன் கருதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் கீழ் செயல்படும் வளசரவாக்கம் மண்டலம் (மருத்துவமனை சாலை, ஜெய் கார்டன், சின்னப்போரூர், சென்னை-600 116) மற்றும் பெருங்குடி மண்டலம் (ஸ்கூல் ரோடு, கந்தன் சாவடி, பெருங்குடி, சென்னை-600 096) ஆகிய இரு மருத்துவ மண்டலங்களில் 100 படுக்கை வசதிகள் கொண்ட 24 மணி நேரமும் செயல்படும் நகர்ப்புற சமுதாய நல வாழ்வு மையங்களில் பருவகால மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள், டெங்கு காய்ச்சல், மலேரியா மற்றும் டைஃபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்களினால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகள் அளிக்கும்பொருட்டு, சிறப்பு தனிக்காய்ச்சல் வார்டுகள் ((Special Fever Ward)) வருகின்ற 21.10.2019 (நாளை) முதல் துவங்கப்பட உள்ளது”.

இவ்வாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in