

விழுப்புரம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு பெண்கள் சென்றுவிடுவதால், களை பறிக்கும் பணி முடங்கியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற 21-ம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக நேருக்கு நேர் மோதுவதால் தமிழகம் இத்தொகுதியில் தேர்தல் முடிவை ஆவலோடு எதிர்ப்பார்த்துகொண்டுள்ளது. இரு கட்சிகளின் தலைவர்களும் இரண்டு கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளனர். இதற்கிடையே தேமுதிக, காங்கிரஸ், பாமக, விசிக கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் ஒவ்வொரு கூட்டத்திற்கும் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் இருந்து பெண்களை அழைத்து வர வாகன வசதி, வந்து போக செலவு, ஒரு நாளைய கூலி போன்றவைகள் கணக்கிட்டு வழங்குவதால் ஒருவரே ஒரு நாளில் 2-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.
இதனால் தற்போது களை பறிக்கும் பணி முடங்கியுள்ளது. தேர்தல் முடிந்த பின் மீண்டும் விவசாய வேலைகளுக்கு பெண்கள் திரும்புவார்கள். ஆனால் அதற்குள் களை வளர்ந்துவிடுவதால் ஒரு ஏக்கரில் களை பறிக்க சுமார் 15 ஆட்கள் என வைத்துக்கொண்டாலும் கூடுதலாக 5 ஆட்கள் தேவைப்படும். இதன் மூலம் ஏக்கருக்கு ரூ 750 அதிகரிக்கும். இதே போல தொகுதி முழுவதும் பயிரிடப்பட்ட பயிர்கள் களை பறிக்காமலும், நடவு பணிகள் தொடங்காமலும் முடங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிந்து 20-ம் தேதி மீண்டும் விவசாயப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.