Published : 19 Oct 2019 02:41 PM
Last Updated : 19 Oct 2019 02:41 PM

ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க யார் காரணம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதா?- முதல்வர் பழனிசாமிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

கே.எஸ்.அழகிரி - முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (அக்.19) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஊழல் ஆட்சிக்கு எதிராக நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் கவனத்தை திசை திருப்புகிற வகையில் அவதூறு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஊழல் புகார் கொடுத்து, வழக்கு தொடுத்ததுதான் காரணம் என்று அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் குறித்து அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் ஊழல் புகார் அளித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஊழல் புகாரில் கையொப்பமிட்டவர்கள் சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.ராஜாராம், சு.திருநாவுக்கரசர், வி.வி. சாமிநாதன், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் பாலா பழனூர் ஆகியோர் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த ஊழல் புகாரை தயாரித்தவர் இன்று அதிமுகவில் இருக்கிற பி.ஹெச்.பாண்டியன்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த ஊழல் புகார் அளித்ததில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்நிலையில் ஊழல் புகார் அளித்து வழக்கு தொடுத்தது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், இதில் ஆதாரங்களை திரட்டி உதவி செய்தது ப.சிதம்பரம் என்று கூறுவது அப்பட்டமான அவதூறு குற்றச்சாட்டு ஆகும். இந்த ஊழல் புகாரின் அடிப்படையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு தொடுப்பதற்கு ஆளுநர் சென்னா ரெட்டியிடம் தீவிரமாக முறையிட்டவர் சுப்பிரமணியன் சுவாமிதான். இத்தகைய உண்மைப் பின்னணியை மூடி மறைக்கிற வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

அன்றைய முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது துறைகளைப் பொறுப்பேற்று, கவனித்து வந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவரது மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்றவரும் அவரே. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் கூறிய கருத்துகளை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 நாட்களில் ஒருமுறை கூட ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. நாள்தோறும் மருத்துவமனைக்குச் சென்று பலமணி நேரம் காத்திருந்தும் ஜெயலலிதாவைப் பார்க்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து விசாரிப்பதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென்று தர்ம யுத்தம் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து கூறும் போது, 'ஒரு மனநோயாளி போல ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார்' என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் சசிகலா முதல்வர் பதவி ஏற்கப்படுவது உச்ச நீதிமன்ற ஆணையினால் தடுக்கப்பட்ட பிறகு, ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தார்கள். முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவிகளைப் பகிர்ந்துகொண்டு அதிமுக ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு விதமான சந்தேகங்களை எழுப்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் ஆஜராகுமாறு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஆறுமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறிய ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி, மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு முன்வராதது ஏன்?

இந்நிலையில் தேவையில்லாமல் ஜெயலலிதாவின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலினும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும்தான் காரணம் என்று கூறுவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் வாக்காளர்களை ஏமாற்ற முடியாது.

இந்த ஊழல் புகாரின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டு இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. உண்மை நிலை இவ்வாறிருக்க பொய் வழக்கு போட்டு, தண்டனை பெற்று மன உளைச்சல் ஏற்படுத்தியதாகக் கூறுவது ஒரு முதல்வரின் பொறுப்பற்ற தனத்தைத்தான் காட்டுகிறது. இதன்மூலம் முதல்வருக்கு சட்டத்தைப் பற்றி, நீதிமன்றத்தைப் பற்றி அறியாமையில் பேசுகிறாரா? வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பழியை போட்டு திசை திருப்பி, வாக்காளப் பெருமக்களை ஏமாற்ற முனைகிறாரா ?

எடப்பாடி பழனிசாமி எவ்வளவுதான் ஆத்திரம் பொங்க குற்றச்சாட்டு கூறினாலும், உண்மைகளை மூடி மறைத்திட முடியாது. எனவே, எடப்பாடி பழனிசாமி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்," என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x