Last Updated : 19 Oct, 2019 01:59 PM

 

Published : 19 Oct 2019 01:59 PM
Last Updated : 19 Oct 2019 01:59 PM

சொத்துக்காக கஞ்சா, மது போதை உள்ளிட்ட கெட்ட பழக்கத்துக்கு ஆளாக்கப்பட்ட பாளை சிறுவனுக்கு மதுரையில் மனநல சிகிச்சை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

பெற்றோர், உடன் பிறந்த சகோதரர் இறந்த நிலையில் சொத்துக்காக கெட்ட பழக்கத்துக்கு ஆளாக்கப்பட்ட நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிறுவனை மனநல சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் சேர்க்க உயர் நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி செய்துங்கநல்லூரைச் சேர்ந்த வி.ராஜன்செல்வின், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், "என் சகோதரி வெமலா மாலிகா, அவரது கணவர் சுரேஷ் ஜெயகுமார். இவர்களுக்கு பாளையங்கோட்டை புனித தாமஸ் தெருவில் வீடு மற்றும் கடை உள்ளது.

வெமலா மாலிகாவும், சுரேஷ் ஜெயகுமாரும், அவர்களின் மூத்த மகன் ஆல்வின் ஆகியோர் இறந்துவிட்டனர். அவர்களின் இரண்டாவது மகன் அஸ்வினுக்கு 14 வயதாகிறது. அவரை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தேன். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக அஸ்வின் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை.

சொத்துக்காக அஸ்வினை விஜய், மகாலெட்சுமி, லெட்சுமணன் ஆகியோர் கடத்தி வைத்துள்ளனர். அஸ்வினை மீட்டு ஒப்படைக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சிறுவன் அஸ்வினை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர் பாளையங்கோட்டையைச் சேர்ந்த லெட்சுமணனுடன் தான் செல்வேன், பள்ளிக்கு செல்லமாட்டேன் என நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

விசாரணையின் போது சொத்துக்காக சிறுவன் பல்வேறு கெட்ட பழக்கவழங்களுக்கு உள்ளாக்கப்பட்டதும், போலி ஆவணங்கள் அடிப்படையில் பவர் பத்திரம் பதிவு செய்து சிறுவனின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அஸ்வின் சொத்துக்களை மீட்டு சாவியை பாளையங்கோட்டை காவல் துறை உதவி ஆணையர் வைத்திருக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் சிறுவனுக்கு சொந்தமான வீடு, கடை என 5 சொத்துக்கள் மீட்கப்பட்டு, அவற்றின் சாவி பாளையங்கோட்டை உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளது. சிறுவனை கட்டுப்பாட்டில் வைத்திருந்த லெட்சுமணன் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. லெட்சுமணனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

லெட்சுமணனை நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அப்போது சிறுவனிடம் இருந்து கைப்பற்றிய சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மீட்க வேண்டும். இதை மனதில் வைத்து போதுமான நாட்கள் போலீஸ் காவலுக்கு நீதித்துறை நடுவர் அனுமதி வழங்க வேண்டும்.

மனநல சிகிச்சைக்காக சிறுவன் அஸ்வின் ஜோனை மதுரை அகானா மருத்துவமனையில் 2 வாரம் சேர்க்க வேண்டும். சிறுவனின் மன நலம் தொடர்பாக அக். 30-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

பின்னர் விசாரணை நவ. 1-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x