Last Updated : 19 Oct, 2019 01:29 PM

 

Published : 19 Oct 2019 01:29 PM
Last Updated : 19 Oct 2019 01:29 PM

மதுரையில் அக்.25, 26 தேதிகளில் அதிகாலை 2 மணி வரை கடைகளைத் திறந்துவைக்க உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை

வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அக்டோபர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் மதுரை மாவட்டத்தில் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.

மதுரை, டெக்ஸ்டைல்ஸ் விற்பனையாளர் கூட்டமைப்பின் செயலர் அஷ்ரப் யூசுப் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தீபாவளி விழா பெரும்பாலானவர்கள் கொண்டாடும் மிகவும் முக்கியமான விழா. இந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விழா கொண்டாடப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு ஏராளமான வியாபரிகள் வட்டிக்கு கடன் பெற்று, ஆடைகளை வாங்கி விற்பனை செய்வர். மதுரை தூங்கா நகரம் என்பதாலும், தீபாவளிக்கு முந்தையவை வெள்ளி, சனிக்கிழமைகள் என்பதாலும் கூலித்தொழிலாளர்கள், பிற மாவட்டங்களில் பணியாற்றுவோர் அவ்விரு நாட்களிலும் மதுரை வந்து பொருட்கள், ஆடைகளை வாங்கிச்செல்வர்.

குறிப்பாக, மதுரையைச் சுற்றியுள்ள சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரைக்கு வந்தேப்பொருட்களை வாங்கிச் செல்வர். இதனால் அக்டோபர் 25, 26 ஆகிய தேதிகளில் இரவு முழுவதும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரி மனு அளித்தும் அனுமதி வழங்கப்படவில்லை.

கடந்த 60 ஆண்டுகளாக இரவு கடைகள் நடத்த அனுமதித்த நிலையில், கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பல வியாபாரிகள் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த இயலாமல், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ஆகையால் வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முந்தைய இரு நாட்களும் மதுரை மாவட்டத்தில் இரவு முழுவதும் கடைகளை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவிந்தராஜ், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அதிகாலை 2 மணி வரை கடை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தார். அதே சமயம், அரசாணையில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
காவல் துறையினர் வரம்புகளை வகுத்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x