Published : 19 Oct 2019 12:35 pm

Updated : 19 Oct 2019 12:36 pm

 

Published : 19 Oct 2019 12:35 PM
Last Updated : 19 Oct 2019 12:36 PM

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: ராமதாஸ்

ramadoss-urges-to-vote-for-aiadmk-in-byelections
ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (அக்.19) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடையவுள்ளது. கடந்த இரு வாரங்களாக நிலவிய பரப்புரை சூடு தணிந்து, அமைதி நிலவக்கூடிய அடுத்த 48 மணி நேரம் தான் தமிழகத்தைத் தொடர்ந்து காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய முடிவு குறித்து மக்கள் சிந்தித்து தீர்மானிப்பதற்கு மிகவும் சரியான நேரமாகும்.

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை விட கூடுதலாகவே சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். அதேநேரத்தில் திமுக இந்த இரு தொகுதிகளையும் வென்றால் கூட, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது; ஆட்சிப் பயணத்திற்கு எந்த தடையும் ஏற்பட்டு விடாது.

அதேநேரத்தில் தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் பார்க்கப்பட வேண்டும். மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சாத்தியமாகக் கூடிய வாக்குறுதிகளை அளிக்கும் அதிமுக - பாமக கூட்டணி தான் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் அதிமுக - பாமக கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்வைத்து போட்டியிட்டது. ஆனால், திமுக தலைமையிலான கூட்டணியோ மக்களை ஆசைக்காட்டி ஏமாற்றும் வகையிலான வாக்குறுதிகளை அளித்து தேர்தலை சந்தித்தது. திமுக கூட்டணி விரித்த மாயவலையில் விழுந்த மக்களும், மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.

ஆனால், தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அணி. அந்த அணி வென்றால் தங்களின் கடன் சுமை குறையும் என்று நம்பிய மக்கள், இப்போது கூடுதல் கடன் சுமைக்கு ஆளாகி, அதை சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவலம் நிலவுகிறது.

அதேபோல் தான் இந்த இடைத்தேர்தலிலும் மக்களை ஏமாற்ற விதவிதமான பொய் வாக்குறுதிகளை வாரி இறைத்தது திமுக கூட்டணி. வடக்கே வன்னியர்களை ஏமாற்றவும், தெற்கே தேவேந்திரர்களை ஏமாற்றவும் திமுக மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வியடைந்து விட்டன.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 30 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தியும், ஆட்சியில் இருந்த 12 ஆண்டுகளில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத திமுக தான், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றப்போவதாக முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

50 ஆண்டுகளாக ஏஜியை கண்டுகொள்ளாமல் அவரது குடும்பத்தை அவமதித்து, அரசியலில் இருந்து விரட்டியடித்த திமுக, ஆட்சிக்கு வந்தால் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப் போவதாக பொய் மூட்டையை அவிழ்த்து விடுகிறது. சாத்தான் வேதம் ஓதுவது தான் நினைவுக்கு வருகிறது.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் உரிமைகளைக் கேட்டு நெல்லையில் பேரணி நடத்திய போது, அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியும், தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்தும் ஒன்றரை வயது குழந்தை உட்பட 17 பேரை திமுக அரசு படுகொலை செய்தது. இப்போது அதையெல்லாம் மறைத்து விட்டு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேவேந்திரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப் போவதாக வாக்குறுதி அளிக்கிறார் திமுக தலைவர். அசுரன் படத்தைப் பார்த்து விட்டு படமல்ல, பாடம் என்று நடிக்கிறார். வாக்குகளை வளைக்க திமுக எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனாலும் மக்கள் இவற்றை நம்பவில்லை.

இடைத்தேர்தலாக இருந்தாலும், பொதுத் தேர்தலாக இருந்தாலும் திமுக வெற்றி பெற்றால், அதனால் பாதிக்கப்படப் போவது அப்பாவி மக்கள் தான். அதிமுக வெற்றி பெற்றால் இரு தொகுதிகளிலும் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாறாக, திமுக வெற்றி பெற்றால் நிலங்களை அபகரிப்பது, கடைகளில் புகுந்து தாக்குவது போன்ற அத்துமீறல்கள் தான் நடக்கும்.

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் வாக்களிக்க வேண்டும்; தமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர இரு தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமகராமதாஸ்விக்கிரவாண்டி இடைத்தேர்தல்நாங்குநேரி இடைத்தேர்தல்அதிமுகதிமுகமு.க.ஸ்டாலின்PMKRamadossVikravandi byelectionNanguneri byelectionAIADMKDMKMK stalin

You May Like

More From This Category

More From this Author