எழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் விமர்சனம்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்
இரா.முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மூடி மறைப்பதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (அக்.19) வெளியிட்ட அறிக்கையில், "ராஜீவ்காந்தி படுகொலையில் சம்மந்தப்பட்டதாக கூறப்படும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்திட வேண்டுமென ஒட்டு மொத்த தமிழகமே கோரி வருகின்றது. தமிழக சட்டப்பேரவை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. உச்ச நீதிமன்றம் 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளித்தது. தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஆளுநர் விடுதலை செய்திட இயலாது என்று மறுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முதல்வரிடம் ஆளுநர் கூறியது உண்மையா? அவ்வாறு எனில் அதனை முதல்வர் ஏற்றுக் கொண்டாரா? அவ்வாறு இருப்பின் அதனை ஏன் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை என்பது குறித்து முதல்வர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

நீட் நுழைவுத் தேர்வில், தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்து மாநில அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்ட செய்தி மறைக்கப்பட்டது நீதிமன்றத்தின் வாயிலாகவே பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது 7 பேர் விடுதலை குறித்தும் மாநில அரசு மூடி மறைத்து வருகின்றது.தமிழக சட்டப்பேரவை, தமிழக அமைச்சரவை ஆகிய உயர்ந்தபட்ச அமைப்புகள் மத்திய அரசால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து முதல்வரும் மற்ற அமைச்சர்களும் கவலைப்படாமல் இருக்கலாம். தாங்கள் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக தங்களின் சுயமரியாதை அனைத்தையும் அவர்கள் இழக்கலாம், இழந்து கொண்டும் இருக்கின்றார்கள். அதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

ஏழு பேர் விடுதலை குறித்து தன் நிலைபாட்டை முதல்வர் வெளிப்படையாக தெரிவித்திடல் வேண்டும் என்பது மட்டுமல்ல - தமிழக சட்டப்பேரவை மற்றும் அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானங்களை நிறைவேற்றிட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in