Published : 19 Oct 2019 10:19 AM
Last Updated : 19 Oct 2019 10:19 AM

சமூகவலைத்தள செய்திகளின் உண்மைத்தன்மை அறியாமல் பகிரக்கூடாது: காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு 

ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் இந்த ஆண்டு 373 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

வங்கி மேலாளர் பேசுவது போல பேசி ஏடிஎம் கார்டிலுள்ள 16 இலக்க எண் மற்றும் சிவிவி எண் மற்றும் ஓடிபி எண் ஆகிய விவரங்களை பெற்றும், போலியாக ஏடிஎம் கார்டை பயன்படுத்தியும் மனுதாரர்களின் வங்கி கணக்கிலிருந்து மோசடி செய்தாக 158 புகார் மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம், ரூ.6.74 லட்சம் பணம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வங்கியின் மூலமாக திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. செல்போன் தொலைந்த புகார்களின்பேரில், 79 போன்கள் கண்டறியப்பட்டு புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக 24 புகார்கள் வரப்பெற்ற நிலையில், 14 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தவறான எஸ்.எம்.எஸ். அனுப்பிய குற்றச்சாட்டில் நான்கு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஈரோடு சைபர் க்ரைம் அதிகாரிகள் கூறும்போது, அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களது செல்போனிற்கு தொடர்பு கொண்டு, வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி ஏடிஎம் கார்டு விவரங்களைக் கேட்டால் பொதுமக்கள் வழங்கக் கூடாது.

சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களுக்கு வரும் செய்தியின் உண்மைத் தன்மை அறியாமல் அதை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம். சில பொய்யான தகவல்களை பகிர்வதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையற்ற வதந்திகளை பரப்புவதற்கு நீங்கள் காரணம் ஆவது மட்டுமின்றி, சில சமயங்களில் நீங்களும் சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் என்பதால் பொது மக்கள் கவனமாக செய்திகளை பகிர வேண்டும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x