

சென்னை
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 13-வது கூட்டம் முதல் முறையாக தமிழகத்தின் திருச்சியில் வரும் அக்.31-ம் தேதி நடக்கிறது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தலைமையில் காவிரி நீர் மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெங்களூருவில் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியிருந்தது.
இருப்பினும், இதுவரை டெல்லியிலேயே நடத்தப்பட்டன. கூட்டத்தில், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட காவிரி நீரை பயன்படுத்தும் மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 11-வது கூட்டம், டெல்லியில் நடைபெற்றபோது அடுத்த கூட்டத்தை பெங்களூருவில் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 12-வது கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் பெங்களூருவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி நடந்தது. தமிழக அரசின் சார்பில் அப்போதைய பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகர், கர்நாடகா சார்பில் ஜெயபிரகாஷ், கேரளா சார்பில் சம்சுதீன், புதுச்சேரி சார்பில் சுரேஷ் ஆகிய நீர்வள துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு தலைவர் உத்தர விட்டார்.
இதைத் தொடர்ந்து, 13-வது கூட்டம் டெல்லி யில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த முறை டெல்லி, பெங்களூரு இல்லாமல், தமிழகத்தில் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடத்தப்படுகிறது. வரும் அக்.31-ம் தேதி காவிரி பாயும் திருச்சி மாநகரில் இக்கூட்டம் ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிர மணியன் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர்.