

இ. மணிகண்டன்
சிவகாசி
சிவகாசியில் இந்த தீபாவளிக்கு புதிய வரவாக காற்று மற்றும் ஒலி மாசைக் குறைக்கும் பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.
‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. 2005-ல் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு அக்.23-ம் தேதி இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பட்டாசு தயாரிக்க பேரியம் பயன்படுத்தக் கூடாது என்றும், சரவெடிகள் தயாரிக்கக் கூடாது என்றும், புகை, சப்தம் குறைந்த அளவு உள்ள பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதனால், வழக்கமான முறையில் தயாரிக்கப்பட்டு வந்த பட்டாசு உற்பத்தியைத் தொடர முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர். மேலும், பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதற்கான விளக்கம் இல்லாததால் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் அடைக்கப்பட்டன.
அதன்பின்னர், கடந்த மார்ச் மாதம் ‘நீரி’ எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆய்வக நிபுணர்கள், சிவகாசியில் பசுமை பட்டாசுக்கான புதிய பார்முலாவை ஆய்வு செய்து பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு பேரியம் நைட்ரேட் அளவைக் குறைத்து அதற்கு மாற்றாக ஜியோலேட் உள்ளிட்ட சில ரசாயனக் கலவைகளை சேர்க்கும் புதிய பார்முலாவை வழங்கினர். அதைக் கொண்டு கடந்த ஏப்ரல் முதல் பசுமை பட்டாசு தயாரிக்கும் பணி சிவகாசி ஆலைகளில் தொடங்கின. தற்போது தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் கூறியதாவது: பசுமைப் பட்டாசு தயாரிக்க புகை மாசு ஏற்படுத்தும் பேரியம் நைட்ரேட் கலவையை 25 சதவீதம் முதல் 30 சதவீதம் குறைத்து, அதற்கு மாற்றாக ஜியோலேட் உள்ளிட்ட சில ரசாயனக் கலவை பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
புதிய ரசாயனப் பொருட்கள் மலிவாக எளிதில் கிடைப்பதால் சிரமமின்றி பசுமைப் பட்டாசு தயாரிக்கப் படுகிறது என்றார்.
10 சதவீதம் விலை குறைவு
இதுகுறித்து பட்டாசு விற்பனையாளர் குமார் கூறும்போது, ‘‘பசுமை பட்டாசுக்கான மூலப்பொருட்கள் எளிதாகக் கிடைப்பதும், விலை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், சாதாரண பட்டாசு விலையைவிட பசுமை பட்டாசுகள் குறிப்பாக வானில் சென்று வெடிக்கும் பேன்ஸிரக பைப் வெடிகள், பூச்சட்டி மத்தாப்புகள் போன்றவை சுமார் 10 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது’’ என்றார்.