Published : 18 Oct 2019 08:35 PM
Last Updated : 18 Oct 2019 08:35 PM

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்

சென்னை

வடகிழக்கு பருவமழையின்போது சென்னை மாநகராட்சி, காவல்துறை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.

வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகர காவல்துறை மற்றும் தொடர்புடைய துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தலைமையில் இன்று (18.10.2019) அம்மா மாளிகையில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கீழ்கண்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக பேசினார்.

அவர் பேசியதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சி 1,894 கி.மீ. நீளத்திற்கு 7,351 எண்ணிக்கையில் மழைநீர் வடிகால்களை பராமரித்து வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 468 இடங்களில் சுமார் ரூ.440 கோடியில் மதிப்பீட்டில் 155.49 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

மழைநீர் வடிகால்களில் சுமார் ரூ.35.05 கோடி செலவினத்தில் தூர்வாரும் பணிகள் மற்றும் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக 5000 ஒப்பந்த பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் 16 சுரங்கப்பாதைகளும், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் 6 சுரங்கப்பாதைகளும் உள்ளன.

இவ்விடங்களில் மழைநீர் வெளியேற்ற ஏதுவாக 60 எண்ணிக்கையில் உயரழுத்த பம்புகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 570 மோட்டார் பம்புகள், தயார்நிலையில் உள்ளன. மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழைவெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகளும், பொதுமக்களை தங்க வைக்க 176 நிவாரண மையங்களும், உணவு வழங்கிட 4 பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்கு சமையல் செய்ய தேவையான பொருட்களும் மற்றும் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்கவும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களும், 52 இடங்களில் பேரிடர் மீட்புக்குழுக்களும் தயார்நிலையில் உள்ளனர். பருவமழையின்போது சாலைகளில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மண்டலத்திற்கு 1 இரவு பணிக்குழுவும், 18 உயர் கோபுர விளக்குகளும் தயார்நிலையில் உள்ளன. அவசரக்கால பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 108 ஜேசிபி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களும், 126 லாரிகளும் தயார்நிலையில் உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளின் விளைவாக கடந்த காலங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கிய நிலை மாறி தற்போது 100-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கும் நிலை உள்ளது.

மேலும், கடந்த 2015-ம் ஆண்டு 306 இடங்கள் அதிகளவு மழைநீர் தேங்கும் பகுதிகளாக இருந்தன. தற்போது மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளால் 8 இடங்கள் மட்டுமே அதிகளவு மழைநீர் தேங்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டு அவ்விடங்களிலும் மழைநீர் தேங்காவண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்களின் கரையோரங்களில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் வசித்து வரும் 15,081 குடும்பங்கள் நாவலூர், திருவொற்றியூர், எழில்நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன”.

என ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

காவல்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு காவல் ஆணையர் தெரிவித்த கருத்துகள்:

“பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் துணை ஆணையர் அளவில் ஒருங்கிணைப்பு அதிகாரி உடனடியாக நியமிக்கப்படுவார். மேலும், மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிற்கு ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்படவுள்ளனர். இதுபோன்று தொடர்புடைய சேவைத்துறைகளான பொதுப்பணித்துறை, மின்துறை, மற்றும் தீயணைப்புத் துறை ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள ஒரு காவலர் நியமிக்கப்படவுள்ளார்.

இதே போன்று காப்பகங்கள் உள்ள பகுதிகளிலும் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் பருவமழை குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ள நியமிக்கப்படவுள்ளனர். வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்ட பகுதிகளின் விவரங்களை மாநகராட்சி அலுவலர்களிடமிருந்தும், தொடர்புடைய துறைகளின் மேற்பார்வை பொறியாளர் அளவிலான அலுவலர்களின் தொடர்பு எண் மற்றும் இதர விவரங்களை காவல் துறை அலுவலர்கள் முன்கூட்டியே பெற்றுக் கொள்ள வேண்டும்.

காவல்துறை துணை ஆணையாளர்கள் மண்டல அளவில் மாநகராட்சி அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். பருவமழை காலங்களில் வெள்ளத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அலுவலர்கள் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறுமின்றி இயல்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் தயார்நிலையில் இருக்க வேண்டும்” என காவல் ஆணையர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், துணை ஆணையர் (பணிகள்)எம்.கோவிந்த ராவ்,, துணை ஆணையாளர் (கல்வி) பி.குமாரவேல்பாண்டியன், மாநகர காவல்துறை கூடுதல் ஆணையாளர் (வடக்கு) தினகரன், கூடுதல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, மாநகர காவல்துறை இணை ஆணையர்கள் போக்குவரத்து இணை ஆணையாளர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர்கள், மாநகர காவல் துணை ஆணையாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய சேவைத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x