Published : 18 Oct 2019 05:16 PM
Last Updated : 18 Oct 2019 05:16 PM

கல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம், பணம், முதலீடுகள்; மொத்த மதிப்பு என்ன? வருமான வரித்துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

சென்னை

கல்கி ஆசிரமம், நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.93 கோடி மதிப்புள்ள பணம், டாலர், தங்கம், வைரம் மற்றும் பல நூறு கோடி முதலீடுகளுக்கான ஆதாரம் சிக்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தைத் தலைமையிடமாகக்கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அம்மா பகவான், ஸ்ரீ பகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர் இந்த ஆசிரமத்தை நிறுவினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் உள்ள நிலையில் சென்னையில் மட்டும் 20 கிளைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சித்தூர் அருகே நத்தம் என்னும் இடத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு தியான வகுப்புகள் கட்டணத்துடன் நடத்தப்படுகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன் நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமம் மற்றும் ஸ்ரீ பகவானின் மகன் என்.கே.வி கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர்.

முதலீடுகள், பங்குதாரர்கள் குறித்தும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:

“கல்கி பகவான் என்று அழைக்கப்பட்ட விஜயகுமாருக்குச் சொந்தமாக ஆந்திராவின் வரதாப்பாளையத்தில் ஆசிரமம் உள்ளது, இதுதவிர சென்னை மற்றும் பெங்களூருவின் பல்வேறு இடங்களில் ஆசிரமம், அது சார்ந்த இடங்கள் உள்ளன.

இவற்றை நிறுவனம் சார்ந்த குழுவும், விஜயகுமாரின் மகன் கிருஷ்ணாவும் நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் ஆசிரமங்களில் பல்வேறு தங்குமிடங்களுடன் கூடிய வகுப்புகள், தியான வகுப்புகள் நடத்துகின்றனர். இதில் அதிக அளவில் வெளிநட்டினர் வந்து தங்குகின்றனர். அவர்கள் வெளிநாட்டு கரன்சியைக் கொட்டுகின்றனர். இவற்றை ஆசிரம நிர்வாகம் கணக்கில் காட்டாமல் மறைத்து தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது.

சென்னை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் வரதாப்பாளையம் உள்ளிட்ட 40 இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அவர்கள் ஆசிரமம் மற்றும் பல்வேறு மையங்களில் ஆவணங்களை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. முக்கிய நிர்வாகிகள், பணியாளர்களிடம் நடத்திய விசாரணையில் பணம் வருமானம், முதலீடு கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் முதலீடுகள் குறித்த தகவல்கள் கிடைத்தன.

கிருஷ்ணா

முதற்கட்ட விசாரணையில் 2014-15 ஆம் நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத வரவு ரசீது ஆவணங்கள் 409 கோடி ரூபாய்க்கான வரவு ரசீது மற்றும் பெரிய தொகைக்கான ரசீதுகள் ஆதாரமாகச் சிக்கின. மேற்கண்ட கணக்கில் காட்டப்படாத பெரிய தொகைக்கான வரவுகள் குறித்த ஆவணங்கள், விலை மதிப்புள்ள பொருட்கள் ஆவணங்கள் மற்றும் ரூ.43.9 கோடி ரொக்கப் பணம் ஆசிரமத்தை நிர்வகித்து வரும் விஜயகுமாரின் மகன் கிருஷ்ணாவின் இல்லம் மற்றும் அதுசார்ந்த நிறுவனங்களில் கைப்பற்றப்பட்டது.

இவை தவிர பலகோடி மதிப்புள்ள வெளிநாட்டுக் கரன்சியும் கைப்பற்றப்பட்டன. மொத்தமாக கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கரன்சியின் மதிப்பு 2.5 மில்லியன் அமெரிக்க டாலராகும். இதன் இந்திய மதிப்பு சுமார் 18 கோடி ரூபாய் ஆகும். இவை தவிர ரூ.26 கோடி மதிப்புள்ள 88 கிலோ தங்கம், ரூ.5 கோடி மதிப்புள்ள 1,271 காரட் வைரம் என 93 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், அமெரிக்க டாலர் மற்றும் தங்க, வைரங்கள் கைப்பற்றப்பட்டன.

இதுதவிர கணக்கில் காட்டப்படாத வருமானமாக ரூ.500 கோடிக்கும் மேல் இருக்கும் என்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மற்றும் கணக்கிடும் பணி நடந்து வருகிறது.

இந்த சோதனையில் கிடைத்த முக்கியத் தகவல் வருமானத்தை மறைத்து இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்ட ஆதாரங்கள் சிக்கியுள்ளன. அமெரிக்கா, சீனா, ஐக்கிய அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கம்பெனிகள் கல்கி ஆசிரமம் நடத்தும் தங்குமிடத்துடன் கூடிய ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணத்தை வசூலித்துள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

இந்தியாவில் வரி விதிப்புக்கு உரிய வருமானத்தை வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் மீது முதலீடு செய்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்தக் குழுவில் உள்ள அறக்கட்டளையில் ஒன்று, நன்கொடைபெற்றுக் கொண்டு மற்ற பிரிவினர் உள்ளை நுழைவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்து, செலவுக் கணக்கு மற்றும் சிறிய கட்டணம் என்ற பெயரில் பெற்றுக்கொண்டு மீண்டும் பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறது.

வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து ரொக்கமாக வெளிநாட்டு கரன்சியைப் பெற்றதற்கான கணக்குகள் ஏதும் இல்லை என்பதும் அந்தப் பணத்தையும் கள்ளச் சந்தையில் மாற்றியுள்ளார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’.

இவ்வாறு வருமான வரித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x