எழுவர் விடுதலை: தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியுமல்ல; சட்டத்தின் ஆட்சியுமல்ல - வேல்முருகன் விமர்சனம்

வேல்முருகன்: கோப்புப்படம்
வேல்முருகன்: கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை

தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியுமல்ல, சட்டத்தின் ஆட்சியுமல்ல என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (அக்.18) வெளியிட்ட அறிக்கையில், "28 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழர்களையும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 161- ன் கீழ் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என 2018 செப்டம்பர் 6-ம் தேதியன்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு. இதன்படி எழுவரையும் விடுவிக்க, தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஓராண்டுக்கு மேலாகியும் ஆளுநர் அதில் கையெழுத்திடவில்லை; திருப்பியும் அனுப்பவில்லை.

இந்நிலையில் தமிழக அரசு 2-வது தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்க வேண்டும்; அதில் ஆளுநர் கையெழுத்திடாதிருக்க முடியாது; சட்டப்படி அவர் கையெழுத்திட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் தமிழக அரசோ 2-வது தீர்மானத்தை இதுவரை அனுப்பவில்லை.

கடைசியில் இப்போது அந்த அமைச்சரவைத் தீர்மானத்தையே நிராகரிப்பதாக, அதையும் வெறும் வாய்மொழியாகவே முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியுமல்ல, சட்டத்தின் ஆட்சியுமல்ல; மாறாக, பாஜகவின் அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பான ஆளுநர் ஆட்சியே என்பது நிரூபணமாகிறது!

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், முன்பே ஆளுநரை நேரில் சந்தித்து அவர்களை விடுவிக்கக் கேட்டுக்கொண்டார்; அப்போது "பரிசீலிக்கிறேன்" என்று பதிலளித்தவர் கையெழுத்திடவேயில்லை. அவர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தினோம். அதன் பிறகும் ஆளுநர் கையெழுத்திடவில்லை.

இந்நிலையில், சட்டத்துக்குப் புறம்பாக இப்படி ஒரு கொடூரம் தங்களுக்கு இழைக்கப்படுவதைக் கண்டித்து வேலூர் சிறையில் முருகன் உண்ணாநிலை மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக அவர் மனைவி நளினியும் உண்ணாநிலை மேற்கொண்டார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, இந்த சட்டமீறலை மக்களிடம் முறையிட்டார். இவை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் பலவும் இதற்காகப் போராட்டங்கள் நடத்தின; ஆனாலும் எதற்குமே செவி கொடுப்பதாக இல்லை ஆளுநரும் தமிழக அரசும்.

இப்போது கடந்த சில நாட்களுக்கு முன், எழுவர் விடுதலைக்காக பிரதமரையே நேரில் சந்திப்பதென அறிவித்திருக்கிறார் அற்புதம்மாள். இந்த நிலையில் பேரறிவாளன் மற்றும் ராபர்ட் பயஸின் முறையீட்டு மனுக்களை விசாரிக்காமல் தாமதப்படுத்துவதும் நடந்திருக்கிறது; இதற்கும் மத்திய அரசுதான் காரணம்; இதை தமிழக அரசு மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லாததும் காரணமே! தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு 2018 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சிபிஐ சிறப்புக்குழுவின் விசாரணை அறிக்கையை மனுதாரர் பேரறிவாளன் தரப்புக்குத் தரவும் அவரது மனுவுக்குப் பதில் அளிக்கவும் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆனால் கடந்த ஓராண்டாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் நிலுவையில் இருந்தது. இதற்கு யார் காரணம் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று (அக்.17), கட்டாயம் நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உறுதியளித்திருக்கிறது. ராபர்ட் பயஸ், நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளைச் செய்ய 30 நாட்கள் பரோல் கேட்டு சிறைத்துறை டிஐஜியிடம் மனு அளித்தார். அதன் மீது டிஐஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கும் யார் காரணம் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

டிஐஜி நடவடிக்கை எடுக்காததால், தனக்கு பரோல் வழங்க சிறைத்துறை டிஐஜிக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ராபர்ட் பயஸ் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி சிறைத்துறை டிஐஜி மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

ஆளுநர் கையெழுத்திடாது காலங்கடத்தியபோது 2-வது தீர்மானத்தை அனுப்பி அவரைக் கையெழுத்திட வைக்கவில்லை; கடைசியில் அதை நிராகரிப்பதாக வெறும் வாய்மொழியாகவே முதல்வரிடம் தெரிவித்தார் ஆளுநர். பேரறிவாளனது தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய மனு விசாரிக்கப்படாமல் வழக்குப் பட்டியலில் இருந்தே நீக்கப்பட இருந்தது. ராபர்ட் பயஸின் பரோல் கேட்பு மனு வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் முழுமுதற் காரணம் தமிழக அரசுதான். மத்திய அரசு ஆளுநர் மூலம் ஆட்டிப்படைத்தாலும் அதற்கு இடங்கொடாமல், பயப்படாமல் தன்னளவிலான அதிகாரத்தைத் தைரியமாகாகப் பயன்படுத்தியிருக்க வேண்டாமா தமிழக அரசு? ஆனால் அப்படிச் செய்யவில்லை என்பதுதான் உண்மை," என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in