Last Updated : 18 Oct, 2019 04:25 PM

 

Published : 18 Oct 2019 04:25 PM
Last Updated : 18 Oct 2019 04:25 PM

'இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலி: அங்கன்வாடி மையங்கள், சத்துமாவு தயாரிக்கும் இடங்களில் அரசு செயலர் திடீர் ஆய்வு

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்து மாவு தயாரிக்கும் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அரசு செயலாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான மதுமதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மத்திய, மாநில அரசு நீர் மேலாண்மை இயக்கம் (ஜல் சக்தி அபியான்)-2019 மூலம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் வில்லிபத்திரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை அரசு செயலர் மதுமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

'இந்து தமிழ் திசை' நாளிதழிலில் அங்கன்வாடி மையத்தில் புழு மற்றும் வண்டுவைத்த சத்துமாவு குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் வழங்கப்படுவதாக கடந்த 12-ம் தேதி செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அரசு செயலாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான மதுமதி, நேற்று வரலொட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவு குறித்து சத்துணவுப்பணியாளர்களிடமும் மற்றும் வழங்கப்பட்டு வரும் உணவு முறைகள் குறித்து மாணவ, மாணவிகளிடமும் கேட்டறிந்தார்.

மேலும், அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று மழலையர்களுக்கு வாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் வழங்கப்பட்டு வரும் உணவு முறைகள் குறித்தும், அங்கு பயிலும் குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம், எடை மற்றும் உயரத்திற்கேற்ற எடை குறித்தும் ஆய்வு செய்து, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை குறைப்பதற்கும், தடுப்பதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, காலை ராஜபாளையத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக்குச் சென்ற அரசு செயலர் மதுமதி, தளவாய்புரத்தில் இயங்கிவரும் இணை உணவு (சத்துமாவு) தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கத்திற்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சத்துமாவு தயாரிக்கப்படும் விதம் குறித்தும், பேக்கிங் செய்யப்படும் முறை குறித்தும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சத்துமாவு தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அரசு செயலாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான மதுமதி பங்கேற்றார்.

அப்போது, பேரிடர் காலங்களில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று அதிகாரிகளை எச்சரித்தார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x