

புதுச்சேரி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான கருத்துகளைக் கூறுவதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு காமராஜர் நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை, கடுமையாக விமர்சித்தார். கிரண்பேடி புதுச்சேரிக்கு பச்சைத் துரோகம் செய்கிறார் எனவும், கிரண்பேடி மூலம் மறைமுக பாஜக ஆட்சி நடைபெறுகிறது எனவும் அடுக்கடுக்காக விமர்சித்தார். ஏனாமில் ஒரு தீவை ஆந்திரத்துக்கு கிரண்பேடி விற்க முயல்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இச்சூழலில் இன்று (அக்.18) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதில், "தவறான கருத்துகளை வெளியிடும் முன் திமுக தலைவர் ஸ்டாலின் எதைப் பாதுகாக்கிறார் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியம். பொய்யான தகவல்களைக் கூறுவது உங்களுக்குப் பொருந்தக்கூடியது அல்ல. அதிகாரிகளால் சுற்றுச்சூழல் மீறல்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஏனாமில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தை இழப்பார்கள். ஏனாமில் சுற்றுலாத்துறை திட்டத்தில் தீவு எண் 5-ல் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதுடன், ரூ.5 கோடியை சுற்றுலா என்ற பெயரிலும் இழந்துள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனாமில் அத்தீவில் தனது ஆய்வு தொடர்பான விடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
செ.ஞானபிரகாஷ்