

திருப்பூர்
புறா பிடிக்கச் சென்று 70 அடி ஆழமான கிணற்றில் விழுந்த கட்டிடத் தொழிலாளியை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் நடுவேலம்பாளையத்தை அடுத்த புதுப்பாளையத்தில் புறா பிடிக்கச் சென்ற கட்டிடத் தொழிலாளி கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணிக்காபுரத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான பாபு என்பவர் இன்று (அக்.18) ஈஸ்வரமூர்த்திக்குச் சொந்தமான கிணற்றுக்கு அருகே நடந்து வந்தபோது புறா ஒன்று அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளார். புறா பிடிக்கும் நோக்கில் கிணற்றுக்கு அருகே சென்றபோது தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.
பாபு கிணற்றில் தத்தளிப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் பல்லடம் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர். பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராகவன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் முருகன், அன்புராஜ், ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 70 அடி ஆழக் கிணற்றில் 15 அடிக்கு இருந்த தண்ணீரில் தத்தளித்த பாபுவை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.