

நாங்குநேரி
நாங்குநேரியில், ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்ததாக திமுக எம்எல்ஏ உட்பட 7 பேர் மீதும், எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தியதாக 24 பேர் என மொத்தம் 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று (அக்.17) வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாக 5 பேரை பொதுமக்கள் சிறைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்.24-ல் நடைபெறுகிறது.
இதனால், இரு தொகுதிகளிலும் இறுதிக்கட்டப் பிரச்சாரம் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனுக்காக, அத்தொகுதிக்குட்பட்ட அம்பலம் கிராமத்தில் திமுகவினர் பணப் பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்தது.
பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உட்பட 5 பேர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எம்எல்ஏ சரவணகுமார் உள்பட ஐந்து பேரையும் சிறைபிடித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவர்களிடம் இருந்து, கட்டுக்கட்டாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததாகத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளும், காவல்துறை விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் எம்எல்ஏ அளித்த புகாரின் அடிப்படையில் அவர்களை தாக்கி பணம், செல்போன் பறித்ததாக அந்த பகுதி மக்கள் 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பணப்பட்டுவாடா தொடர்பாக திமுக எம்எல்ஏ உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.