சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு; 2 வாரத்தில் பதிலளிக்கவேண்டும்: அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு உயர் நீதிமன்றம் கெடு

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு; 2 வாரத்தில் பதிலளிக்கவேண்டும்: அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு உயர் நீதிமன்றம் கெடு
Updated on
1 min read

சென்னை

சென்னை, கோவை மாநகராட்சிகள் பணிக்கான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2 வாரத்துக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் கெடு விதித்தது. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்காமல் அவகாசம் கேட்பதற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

சென்னை கோவை மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் ஜெயராமன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

அவர்களது கோரிக்கையில், சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்புப் பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணையில் இருந்தது. ஜனவரி 4-ம் தேதி அன்று விசாரணைக்கு வந்த வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “மாநகராட்சி டெண்டர் முறைகேடு குறித்து அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த பொதுத்துறை முதன்மைச் செயலாளர் அனுமதி அளித்துள்ளார். அதன்படி ஆரம்பகட்ட விசாரணை தொடங்கியுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் நிலை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய கடந்த ஜனவரி மாதம் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற அமர்வு முன் விசாரணை அதிகாரியான லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சங்கர் ஆஜராகி, முறைகேடு புகார் தொடர்பாக 349 உள்ளாட்சி டெண்டர்கள் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி உள்ளதாகவும், 41 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 117 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்தார்.
அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், முழுமையான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 3 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும், என கோரிக்கை வைத்தார்.

வழக்கு விசாரணையில் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உத்தரவு பிறப்பித்து ஓராண்டு காலம் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரிவித்தனர். மேற்கொண்டு விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பி பொன்னி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விசாரணையை கண்காணித்து 2 வாரங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் இதுவரை பதிலளிக்காத அமைச்சர் வேலுமணி 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என கடைசி கெடு விதித்து விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in