Last Updated : 18 Oct, 2019 12:45 PM

 

Published : 18 Oct 2019 12:45 PM
Last Updated : 18 Oct 2019 12:45 PM

நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய சுயேட்சை வேட்பாளரின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாங்குநேரி இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம், நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த உரிய முன்னேற்பாடுகளை எடுக்கும் என நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தைச் சேர்ந்த சங்கரசுப்பிரமணியன். இவர் நாங்குநேரி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவர் உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நாங்குநேரி தொகுதியில் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தொகுதியில் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனர். அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க ஒவ்வொரு வாக்காளரருக்கும் தலா 2 ஆயிரம் வீதம் 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேபோல வேட்புமனு தாக்கல் வரிசையின் அடிப்படையிலேயே வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் வரிசைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தில், 8-ம் நபராக ஏற்றுக்கொள்ளப்பட்ட எனது சின்னம் அந்த வரிசைப்படி இல்லை.

மேலும், அக்டோபர் 1-ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் விபரங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், கட்சியை சேர்ந்தவர்களுக்கு அன்றைய தினமே சின்னங்கள் தெரிந்தது. ஆனால், சுயேட்சை வேட்பாளர்களுக்கு 15 மணி நேரத்திற்கு பின்னரே சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.

ஒரே தொகுதியில் போட்டியிடுபவர்களுக்கு இது போல வேறுபாடு காட்டுவது ஏற்கத்தக்கதல்ல. அதோடு, தொகுதி முழுவதும் உலாவரும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆளும் கட்சியினர், சமூக விரோதிகள், குண்டர்களால் தொகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

அக்டோபர் 12 ஆம் தேதி நடு இரவில், 30 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்படாமல், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இவை தொடர்பாக நடவடிக்கை கோரியும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21-ல் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, அக்டோபர் 21-க்கு பிறகு தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்"
எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு,"தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தேர்தல் ஆணைய நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட இயலாது.

அது தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் அவர்களே நடவடிக்கை எடுப்பர். மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றதில் என்ன பிரச்சினை?" என கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் தரப்பில் "வேட்பாளர்களிடம் தெரிவிக்காமல் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது" என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், "மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், முழு வீடியோ பதிவுடனேயே கொண்டு செல்லப்பட்டுள்ளன. தேர்தலன்று ஏதேனும் முறைகேடுகள் நிகழ்ந்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கலாம்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து மனுதாரர், வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 20 கோடிக்கும் அதிகமாக வாக்குக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படைகள் இல்லையா? என கேள்வி எழுப்பினர்.

அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தேர்தலை முறையாக நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க பறக்கும் படைகள் மூலமாக கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 18 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், நாங்குநேரி இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம், நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த உரிய முன்னேற்பாடுகளைச் செய்யும் எனக்கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x