சசிகலா வெளியே வந்தவுடன் தினகரனின் அமமுகவில் இணைய மாட்டார்: புகழேந்தி

புகழேந்தி: கோப்புப்படம்
புகழேந்தி: கோப்புப்படம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அமமுகவில் இணைய மாட்டார் என, அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நேற்று (அக்.17) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் தினகரன் தொடங்கியுள்ள அமமுகவில் இணைய மாட்டார் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ள கருத்தை தாம் வரவேற்பதாகத் தெரிவித்தார். மேலும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை தாம் மனதாரப் பாராட்டுவதாகவும், அவர் முதிர்ந்த அரசியல்வாதியைப் போல கருத்துகளைத் தெரிவித்து வருவதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்தையும் புகழேந்தி விமர்சித்தார்.

"சசிகலா கடவுள் முன்பு நிரபராதியாக இருக்கிறார். ஆனால், நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழக்கியிருக்கிறது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஜெயலலிதாவை மனதில் வைத்துக்கொண்டு சசிகலா குறித்து கருத்து சொல்லியிருக்கிறார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை நான் மனதாரப் பாராட்டுகிறேன். விரைவில் சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா, டிடிவி தினகரனின் கட்சிக்கெல்லாம் போகமாட்டார். அப்படி நினைத்துக் கூட பார்க்க வேண்டாம்," என புகழேந்தி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in