

புதுச்சேரி
ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நாராயணசாமியும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடப்பாடி பழனிசாமியும் எடுத்துக்காட்டு என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.17) மாலை, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட தென்றல் நகர், ரெயின்போ நகர் பிரெஞ்சு கார்னர், கிருஷ்ணா நகர் முதல் குறுக்கு தெரு சந்திப்பு, சிவாஜி சிலை - காமராஜர் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான் குமாரை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஸ்டாலின் பேசியதாவது:
"ஜான்குமார் ஏற்கெனவே நடந்த பொதுத் தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே அவருக்கு அறிமுகம் தேவையில்லை.
அவர், புதுவையின் முதல்வராக நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் ஒரு இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்காக நெல்லித்தோப்பு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜான்குமார் ஒரு பெரிய தியாகத்தைச் செய்தார். நாராயணசாமிக்காகத் தியாகம் செய்தவர்தான் ஜான்குமார்.
நாராயணசாமிக்குக் கை கொடுத்தவர், இன்றைக்கு கை சின்னத்தில் வாக்குகள் கோரி வந்துள்ளார். அவருக்கு சிறப்பான வகையில் வெற்றியை பெற்றுத் தர வேண்டும்.
நாங்கள் இருக்கும் தமிழ்நாட்டில், ஒரு அடிமை முதல்வர் இருக்கிறார். நல்லவேளையாக, புதுச்சேரியில் ஒரு புரட்சி முதல்வர் இருக்கிறார். தமிழ்நாட்டில் நேரடியாக, மத்தியில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் நேரடியாக இல்லாவிட்டாலும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூலமாக மறைமுகமாக பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதுதான் வித்தியாசம்.
தமிழ்நாட்டில் ஒரு ஆளுநர் இருக்கிறார். ஆளுநர் செய்யக்கூடிய அராஜகத்தைத் தட்டிக் கேட்கக் கூடிய துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.
ஆனால், புதுச்சேரியில் இருக்கும் ஆளுநரின் அராஜகத்தைத் தட்டிக் கேட்கக் கூடிய முதல்வர் இருக்கிறார் என்றால் அது நாராயணசாமி தானே. அவர் ஜனநாயகத்தை கட்டிக் காப்பாற்றுகிறார்.
இலவச அரிசித் திட்டம், இலவச வேட்டி சேலைத் திட்டம் ஆகிய மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைத் தடுக்கக்கூடிய துணைநிலை ஆளுநர் புதுச்சேரியில் இருக்கிறார் என்றால், இதைவிட வேறு என்ன வெட்கக்கேடு இருக்க முடியுமா?
எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் யார்? அதிமுக - பாஜக கூட்டணியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர். புதுச்சேரிக்கு என்று இருக்கக்கூடிய தன்மானம் – சுயமரியாதை, உரிமை பறிக்கப்படுகிற நேரத்தில், அதை தட்டிக்கேட்கிற துணிச்சல், நாராயணசாமிக்கு இருக்கிறது. அது ஏன் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முதல்வருக்கு இல்லை?
முதல்வர்ல பதவி போய்விடும் - ஆட்சி போய்விடும். ஆட்சி - பதவி போவது ஒரு புறம் என்றால், அடுத்த நாளே சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற அந்த அச்சத்தின் காரணமாக அடிபணிந்து இருக்கிறார்கள்.
ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு முதல்வர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ஒரு அடையாளம்தான், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி. ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளம் தான் புதுச்சேரியில் இருக்கக்கூடிய நாராயணசாமி".
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.