Published : 18 Oct 2019 10:18 AM
Last Updated : 18 Oct 2019 10:18 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை ஓய்கிறது: வாக்குப்பதிவு தினமான அக்.21-ல் பொதுவிடுமுறை அறிவிப்பு

திருநெல்வேலி

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. மேலும், வாக்குப் பதிவு தினமான அக்.21-ம் தேதி இரு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2 தொகுதிகளிலும் வரும் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 16-ம் தேதி முதல் 2 தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் சீட்டுகள் (பூத்சிலிப்) வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நாங்குநேரி தொகுதியில் 23 வேட்பாளர்களும் விக்கிரவாண்டி தொகுதியில் 8 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

இதையொட்டி, நாங்குநேரி தொகுதியில், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீஷ், தேர்தல் பொதுபார்வையாளர் விஜயா சுனிதா, செலவின பார்வையாளர் அஜய்குமார் சிங் உள்ளிட்டோர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள்.

இத்தொகுதியில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை 30 மண்டலங் களாக பிரிக்கப்பட்டு, மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். தேர்தல் பணியில் 1,400 அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 800 போலீஸாரும், 3 கம்பெனி துணை ராணுவப் படையினரும் வரவுள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 3 கம்பெனிகள் ஏற்கெனவே வந்துள்ளன. மேலும், 10 கம்பெனி போலீஸார் வரவுள்ளனர்.

தொகுதியின் பல்வேறு இடங் களில் போலீஸார் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர். பணப்பட்டுவாடாவை தடுக்க 28 சோதனைச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. தொகுதியில் உள்ள தலைவர்களின் 20 சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சுப்பிரமணியன், தேர்தல் பொதுப் பார்வையாளர் சினு வீர பத்ரடு ஆகியோர் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மொத்தம் 275 வாக்குச் சாவடிகளில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப் பட்டுள்ளன. 1,331 பணியாளர்கள் இந்த இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். பதற்றமான பகுதி களில் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. தொகுதி யைச் சுற்றிலும் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக போலீஸாருடன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

விடுமுறை அறிவிப்பு

இடைத்தேர்தல் நடைபெ றுவதை முன்னிட்டு, அக்.21-ம் தேதி விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட் டுள்ள அரசாணையில், ‘‘2 தொகுதி களின் வக்காளர்களாக இருந்து, அதே நேரம் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பணியாற்றுவோருக்கு அன்று வாக்களிக்க வசதியாக சம் பளத்துடன் கூடிய விடுப்பு அளிக் கப்பட வேண்டும். 2 சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்பில் இயங்கும் தொழிற்பிரிவுகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அக். 21-ம் தேதி மூடப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x