

சென்னை
பரம்பிக்குளம் - ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா ஆகிய நதிநீர் திட்டங்கள் குறித்து கேரளாவுடன் பேச்சு நடத்த தமிழகம் சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் - கேரளா இடையிலான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த நவம்பர் 25-ம் தேதி திருவனந்தபுரம் சென்று, கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, ‘நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இரு தரப்பிலும் தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அனைத்து நதிநீர் பிரச்சினைகளையும் தீர்க்க இரு மாநில தலைமைச் செயலர்களும் 6 மாதங்களுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, செயல்பாடுகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள்’ என்று பேச்சுவார்த்தை முடிவில் தெரிவிக்கப்பட்டது. இந்த குழு 2 வாரத்தில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யவும், பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில செயலர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, இரு திட்டங்களுக்காகவும் தமிழகம் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுப்பணித் துறை செயலர் க.மணிவாசன், காவிரி தொழில் நுட்பக் குழும தலைவர் ஆர்.சுப்பிரமணியன், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழக கண்காணிப்பு பொறியாளர் ஏ.முனா வர் சுல்தானா ஆகி யோர் இரு குழுவிலும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கான குழுவில் பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர் ஆர்.இளங்கோவன், கண்காணிப்பு பொறியாளர் பொ.முத்துசாமி இடம்பெற்றுள்ளனர். பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்துக்கான குழுவில் பொதுப்பணித் துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் ஈ.தமிழரசன், கண்காணிப்பு பொறி யாளர் எஸ்.சிவலிங்கம் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறை செயலர் க.மணி வாசன் தெரிவித்துள்ளார்.