Published : 18 Oct 2019 09:02 AM
Last Updated : 18 Oct 2019 09:02 AM

நூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை ஓராண்டு பிரச்சாரம் செய்ய வேண்டும்: மூத்த தலைவர் சங்கரய்யா வலியுறுத்தல்

சென்னை

கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை ஓராண்டு முழுவதும் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா வலியுறுத்தியுள்ளார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா கட்சி கொடியேற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் சங்கரய்யா பேசியதாவது:

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கம் ஏன் தொடங்கப்பட்டது, அதன் கொள்கைகள் என்ன என்பது குறித்தும் மக்களுக்கு இந்த இயக்கம் செய்த தியாகங்கள், இன்றைய காலத்துக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தேவைகள் குறித்தும் ஓராண்டு முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

காரல் மார்க்ஸ் இறந்தபோது அவரது கொள்கைகளும் அழிந்துவிட்டதாக பேசினார்கள். ஆனால், காலங்கள் செல்லச் செல்லத்தான் அவரது பெருமைகள் புரியத் தொடங்கின. இன்றைக்கு பலரும் மார்க்ஸின் கொள்கைகளை படிக்கத் தொடங்கியுள்ளனர்.

உலக மக்களின் பிரச்சினைகளை முதலாளித்துவத்தால் தீர்க்க முடியவில்லை என்பது தெரிந்துவிட்டது. அதை சோஷலிஸத்தால் மட்டுமே தீர்க்க முடியும். எனவே, கம்யூனிஸ கொள்கைகளை அதிகமான மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இன்றைய இந்திய அரசியல் சூழலில் மதவாத சக்திகளை வீழ்த்தி, ஜனநாயகம், மதச்சார்பின்மையை பாதுகாக்க கம்யூனிஸத்தால் மட்டுமே முடியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும். ஒதுங்கியிருக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு சங்கரய்யா பேசினார்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, ‘‘கம்யூனிஸ்ட் நூற்றாண்டை முன்னிட்டு கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், கண்காட்சிகளை நடத்தவும், தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்ளவும் மார்க்சிஸ்ட் திட்டமிட்டுள்ளது. அரசியல் சட்டத்தையே மாற்ற முயற்சித்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை எதிர்கொள்ளும் சவாலான பணியை கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x