

திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள அசேஷம் ஊராட்சியில் சுகாதார சீர்கேட்டைச் சுட்டிக்காட்டி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்குப் புகார் மனு அளித்தவரின் வீட்டைச் சோதனையிட்ட அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
அசேஷம் ஊராட்சி பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். பாரதிதாசன் நகரில் உள்ள இவரது வீட்டில் குழந்தையுடன் மனைவி வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மீன், இறைச்சிக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது.
இதுகுறித்து, ஊராட்சி செயலாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், கடந்த 14-ம் தேதி மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் கலைச்செல்வத்திடம் முத்துக்குமார் புகார் மனு அளித்தார். தொடர்ந்து, அன்றே முத்துக்குமார் சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று முத்துக்குமாரின் வீட்டுக்கு மாவட்ட மலேரியா அலுவலர் பழனிசாமி தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் புவனி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வம், ஞானம் உள்ளிட்டோர் வந்தனர். வீட்டைப் பார்வையிட்ட பின்னர், மாடியில் தண்ணீர் தேங்கியிருந்ததைச் சுட்டிக்காட்டி, கொசுப் புழுக்கள் உற்பத்தி உள்ளதாகக் கூறி மாவட்ட மலேரியா அலுவலர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதி யில் உள்ள மீன் கடை மற்றும் இறைச்சிக் கடைக்குச் சென்ற அதிகாரிகள் சுகாதாரமாக பராமரிக் காததற்காக தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து அசேஷத்தில் உள்ள வேறு சில வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டனர். 4 வீடுகளில் கொசு உற்பத்தி ஆதாரங்கள் இருந்ததால் அதற்காக தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதைத் தொடர்ந்து பொக்லைன் வரவழைக்கப்பட்டு இறைச்சிக் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்றது.
‘‘கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இறைச்சிக் கடைகளில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் நாங்கள் அவதியுற்று வருகிறோம். இதேபோல, பாரதிதாசன் நகரில் உள்ள வாய்க்காலில் குப்பை தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், புகார் அளித்தவரின் வீட்டுக்கு அபராதம் விதிப்பதாகக் கூறுவது, பொதுப் பிரச்சினைகளுக்காக மனு கொடுப்பவர்களை அச்சுறுத்துவது போல உள்ளது’’ என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சிங்கப்பூரில் இருந்து முத்துக்குமார் செல்போனில் கூறியபோது, ‘‘என் வீட்டின் மாடியில் நடைபெறும் கட்டுமான பணிக்காக கான்கிரீட் தளத்தில் தண்ணீர் தேக்கி வைத்துள்ளதை பார்த்துவிட்டு, இதில் கொசுப் புழு உற்பத்தியாவதாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். ஆனால், இத்தனை நாட்களாக சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய கடைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் விதித்திருப்பது வேதனையளிக்கிறது. எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானம், கலைச்செல்வம் ஆகியோரிடம் கேட்டபோது, ‘‘ஆட்சியரின் உத்தரவின்பேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட மலேரியா அதிகாரிதான் முத்துக்குமார் வீட்டுக்கு அபராதம் விதித்துள்ளார். இறைச்சிக் கடைகளுக்கு மட்டுமே நாங்கள் அபராதம் விதித்தோம். மேலும், அங்கு இறைச்சிக் கடை நடத்த நாங்கள் அனுமதி அளிக்கவில்லை. அப்பகுதியைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.