

சென்னை
பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்ற தமிழ்நாடு கிளையின் ஒருங்கிணைப்பாளர் சி.கே.மதிவாணன் சென்னையில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் 85 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களுக்கு 8 மாதமாக சம்பளம் வழங்க வில்லை. பிஎஸ்என்எல் ஊழியர் களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தைப் பாதுகாக்க மத்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுத் துறை மற்றும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்கள் தொலைதொடர்பு சேவைகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தை மட்டுமே பயன் படுத்த உத்தரவிட வேண்டும். தொலைதொடர்பு அமைச்சகம் பாக்கி வைத்துள்ள ரூ.2,500 கோடியை உடனே வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 25-ம் தேதி ஆளு நரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.