Published : 18 Oct 2019 08:25 AM
Last Updated : 18 Oct 2019 08:25 AM

இந்தியாவில் எல்லா காலகட்டங்களிலும் நீதித் துறையை கட்டுப்பாட்டில் வைக்க அரசுகள் முயற்சி: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செலமேஸ்வர் கருத்து

சென்னை

இந்தியாவில் எல்லா காலகட்டங்களிலும், எல்லா அரசுகளும் நீதித் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெ.செலமேஸ்வர் தெரிவித்தார்.

திருவல்லிக்கேணி கலாச்சார அகாடமி, கஸ்தூரி சீனிவாசன் நூலகம் சார்பில் ‘முக்கியமான கட்டத்தில் நீதித்துறை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் மயிலாப்பூரில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெ.செலமேஸ்வர் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

இந்தியாவில் பல வழக்குகளில் நீதி கிடைப்பதற்கு அதிக காலம் ஆகிறது. தமிழகம், பிஹார் மாநில அரசியல்வாதிகள் மீதான வழக்கு களில் நீதி கிடைக்க பல ஆண்டுகள் ஆகின.

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மீது வலுவான ஆதாரத்துடன் முக்கிய குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டு நீதி மன்றங்களில் வழக்குகள் நடந்து வந்தன. வழக்கின் தீர்ப்பு வரு வதற்கு முன்பே, அதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதியும், குற்றம் சாட்டப்பட்ட என்.டி.ராமராவும் இறந்துவிட்டனர்.

இவ்வாறு வழக்குகள் அதிக காலம் எடுத்துக்கொள்ளும் விவ காரத்தை எம்.பி.க்கள் நினைத் தால் முடிவுக்கு கொண்டு வந்தி ருக்கலாம். ஆனால், அவர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை.

நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்ற பரிந்துரைகளை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்கவே 1985-ம் ஆண்டு கொலீஜியம் கொண்டு வரப்பட்டது. நீதிபதிகள் நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு ஆகி யவை அதன் கீழ் கொண்டுவரப் பட்டன. இதற்கு முன்பு நீதிபதிகள் நியமனத்தை விமர்சிக்க முடியும். ஆனால், கொலீஜியத்தின் செயல் பாடுகளை விமர்சிக்க முடியாது.

இந்தியாவில் எல்லா காலகட்டங்களிலும், எல்லா அரசுகளும் நீதித் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன. சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும். மக்களாட்சியை பாதுகாக்க அனைவரும் உறுதி யேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவல்லிக் கேணி கலாச்சார அகாடமி செயலர் கிருஷ்ணசாமி, துணைத் தலைவர் சந்தான கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x