Published : 17 Oct 2019 05:45 PM
Last Updated : 17 Oct 2019 05:45 PM

யாழ்ப்பாணம் விமான நிலையம்  36 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு: சென்னையிலிருந்து முதல் விமானம் இயக்கம்

36 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் இன்று(அக்.17) வியாழக்கிழமை திறக்கப்பட்டு சென்னையிலிருந்து முதல் விமானம் இயக்கப்பட்டது.

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலியில் இரண்டாம் உலகப் போரின் போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான் படைத் தேவைக்காக விமானதளம் அமைக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சென்னை மற்றும் தென்னிந்திய நகரங்களிலிருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு விமான சேவைகள் நடைபெற்றன.

1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

36 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் விமான நிலையத்தினை அதிபர் மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திறந்து வைத்தனர்.

இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து, அமைச்ச்ர்கள் அர்­ஜூன ரண­துங்க, விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து சென்னையிலிருந்து வந்த அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானம் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அடுத்தகட்டமாக மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி ஆகிய விமான நிலையங்களிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

36 ஆண்டுகள் கழித்து மீண்டும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இயங்கியது இலங்கை தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x