Published : 17 Oct 2019 02:05 PM
Last Updated : 17 Oct 2019 02:05 PM

எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும்: திருச்சியில் நடைபெற்ற அறிவியல் திருவிழாவில் துணை ஆட்சியர் எஸ்.சரண்யா அறிவுறுத்தல்

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(விஐடி), ‘இந்து தமிழ்' நாளிதழ் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து திருச்சி தேசியக் கல்லூரியில் கடந்த அக்.13-ம் தேதி நடத்திய, திருச்சி மண்டல அளவிலான ‘நாளைய விஞ்ஞானி' என்ற தலைப்பிலான அறிவியல் திருவிழாவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து மாநில அறிவியல் திருவிழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட 25 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த பள்ளி மாணவ, மாணவிகளுடன் (இடமிருந்து) தேசியக் கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தர்ராமன், திருச்சி மாவட்ட துணை ஆட்சியர் எஸ்.சரண்யா ஐஏஎஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் முனைவர் தினகரன், விஐடி பல்கலைக்கழக முதுநிலை உதவிப் பேராசிரியர் அனு பைசல், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய விஞ்ஞானி வீ.ராஜசேகர், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் முனைவர் சுகுமாறன். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

எந்தவொரு கண்டுபிடிப்பும் நீடித்த- நிலைத்த மற்றும் எதிர்கால சந்ததியினருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட துணை ஆட்சியர் எஸ்.சரண்யா ஐஏஎஸ் தெரிவித்தார். வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி (விஐடி) வழங்கும் ‘நாளைய விஞ்ஞானி’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திருவிழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துகின்றன.

இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். தங்கள் பகுதியில் நிலவும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை பல்வேறு அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில், மாணவர்கள் தயாரித்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் திருச்சி மண்டல அறிவியல் திருவிழா திருச்சி தேசியக் கல்லூரி வளாகத்தில் கடந்த அக்.13-ம் தேதி நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

திருச்சி மண்டல அறிவியல் திருவிழாவில் சமர்ப்பிக்கப்பட்ட 167 ஆய்வுகளில் இருந்து 25 சிறந்த ஆய்வுகள் வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநில அறிவியல் திருவிழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டன.

நாளிதழ் வாசிப்பு அவசியம்

அறிவியல் ஆய்வுக் கட்டுரை தயாரிப்பில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி திருச்சி மாவட்ட துணை ஆட்சியர் எஸ்.சரண்யா பேசியதாவது:

எதனுடன் எதை இணைக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுத்தினால் மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். நம் நாட்டில் இல்லாத வளம் இல்லை. எனவே, வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல வேண்டியதில்லை. முறையாக பாடுபட்டால் எதிலும் உயர்ந்த நிலையை எட்ட முடியும். குறிப்பாக, அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இதற்கு, தினமும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல இந்திய குடிமகனாக வாழ வேண்டும்.

எதிலும் வெற்றி பெற்றவுடன் அதோடு திருப்தி அடைந்துவிடக் கூடாது. அடுத்தடுத்து வெற்றி பெறுவதற்காக தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். உங்களின் ஆய்வு, கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட எந்தவொரு வளர்ச்சியும் நீடித்த- நிலைத்த மற்றும் எதிர்கால சந்ததியினருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். இளம் விஞ்ஞானிகளை நாட்டின் அறிவியல், ஆராய்ச்சித் துறை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க தயாராக உள்ளது.

எனவே, அற்புதமான இந்த பள்ளிப் பருவத்தில் உங்களின் கவனத்தைச் சிதறவிடாமல், வாழ்வின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நன்றாகப் படிக்க வேண்டும். வாழ்வில் பணம், சொத்துகளை இழக்கலாம். ஆனால், நல்ல நடத்தையை இழந்துவிடக் கூடாது. ஒழுக்கத்துடனும், சுய கட்டுப்பாட்டுடனும் இருந்தால் வாழ்வில் பெரிய இடத்தை அடையலாம் என்றார்.

ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்

விஐடி பல்கலைக்கழக முதுநிலை உதவி பேராசிரியர் டாக்டர் அனு பைசல் பேசியது: எந்தவொரு போட்டியிலும் பங்கேற்கும் அனைவருமே வெற்றியாளர்கள்தான். வெற்றி பெறாவிட்டால் துவண்டு அந்த முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது. தொடர்ந்து முயற்சி செய்தால், அடுத்த முறை நிச்சயம் இலக்கை அடையலாம். இலக்கை நோக்கி ஓடும்போது இடர்படும் தடைக்கற்களை படிக்கற்களாக்கி முன்னேறி வெற்றிபெற வேண்டும். கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டால்தான் அடுத்த நிலைக்கு உயர முடியும். எனவே, கல்வி மட்டுமின்றி போட்டிகள், கண்காட்சிகள் உள்ளிட்ட எல்லாவித நிகழ்வுகளிலும் மாணவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றார்.

அறிவியல் திருவிழாவில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கு கிறார் துணை ஆட்சியர் எஸ்.சரண்யா.

மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் எஸ்.தினகரன் பேசியதாவது: படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத நிலையில், கஷ்டப்பட்டு ஏன் அறிவியலைப் படிக்க வேண்டும் என்று பெரும்பாலான இளைஞர்கள் கருதுகின்றனர். அதன் காரணமாகவே அறிவியல் பாடத்தைப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

எனவே, குழந்தைப் பருவத்தில் சிறிய அறிவியல் படைப்புகளை படைக்க ஊக்குவிப் பதன் மூலமாகவும், இத்தகைய அறிவியல் திருவிழாக்களில் பங்கேற்கச் செய்வதன் மூலமாகவும் அறிவியலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த முடியும். மேலும், ஆசிரியரிடமிருந்து கற்றுக் கொள்வதைக் காட்டிலும், குழந்தைகள் குழுவாகச் சேர்ந்து ஒரு படைப்பை உருவாக்கும்போது அறிவியல் விதிகள் குறித்த நல்ல புரிதல் அவர்களுக்கு ஏற்படும்.

குழந்தைகள் கூறும் கருத்துகளை, பிரச்சினைகளை, தீர்வுகளை ஆசிரியர்கள் கேட்டறிந்து, நன்றாக இருக்கும்பட்சத்தில் அவற்றை ஆராய்ச்சி மூலம் ஊக்குவித்து, மேலும் செழுமைப்படுத்த வேண்டும். இவ்வாறான தனிப்பட்ட முறையில் கிடைக்கும் தொழில்நுட்பங்களை ஆவணப்படுத்த முடியும் என்று இந்திய அரசு கருதுகிறது. எனவேதான், குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்க இதுபோன்ற அறிவியல் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன என்றார்.

லட்சியத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்

அறிவியல் திருவிழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய விஞ்ஞானி வீ.ராஜசேகர் உரையாடினார். அப்போது, “குறிப்பிட்ட பாடம் குறித்துதான் படிக்க வேண்டும் என்றில்லாமல் அனைத்தையும் ஆழமாகப் படிக்க வேண்டும். படிக்கும்போது இலக்கு, லட்சியத்தை அவசியம் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். சக மனிதர்களை மதித்து வாழும் மனிதநேயம் மிக அவசியம். சமூகவலைதளங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது, கவனச்சிதறல்கள் இருக்கக் கூடாது. ஆதாரமின்றிக் கூறப்படும் எது குறித்தும் மாணவர்கள் உடனடியாக கேள்வி எழுப்ப வேண்டும்’’ என்றார்.

மேலும், சந்திரயான்-1, சந்திரயான்-2 திட்டங்கள் குறித்து காணொலிக் காட்சி மூலம் அவர் விளக்கம் அளித்தார். முன்னதாக நடைபெற்ற அறிவியல் திருவிழா தொடக்க நிகழ்வுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவர் முனைவர் வி.சுகுமாறன் தலைமை வகித்துப் பேசினார். திருச்சி மாவட்டச் செயலாளர்
எம்.மணிகண்டன் வரவேற்றார்.

இளம் அறிவியலாளர்களை வாழ்த்தி தேசியக் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சுந்தரராமன் உரையாற்றினார். மாணவர்கள் தங்களின் அறிவியல் ஆய்வுகளைச் சமர்ப்பிக்கும் பணிகளை ‘நாளைய விஞ்ஞானி ' திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.தியாகராஜன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

நிகழ்ச்சிகளை ‘இந்து தமிழ்' நாளிதழின் (சென்னை பதிப்பு) தலைமைச் செய்தியாளர் வி.தேவதாசன் தொகுத்து வழங்கினார். நிறைவாக, விளம்பரத் துறை உதவி மேலாளர் பி.ஆர்.ரமேஷ் நன்றி கூறினார்.

மதுரை மற்றும் கோவை மண்டலங்களுக்கான ‘நாளைய விஞ்ஞானி’ அறிவியல் திருவிழா வரும் அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் பிரச்சினைகளுக்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் பள்ளி மாணவர்கள் அறிவியல் வழிமுறைப்படி ஆராய்ந்து, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கிறார்கள்.

மதுரை மண்டலம்:

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி

இடம் - அமெரிக்கன் கல்லூரி, தல்லாகுளம், மதுரை

நேரம் - காலை 9 மணி முதல் மேலும் தகவல்களுக்கு - வி. இராமமூர்த்தி 9786073353 / ப. விஜயகுமார் 9894220609

கோவை மண்டலம்:

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி

இடம் - எஸ்எஸ்விஎம் ஸ்கூல் ஆஃப் எக்சலென்ஸ்,

சைட் : 208 - 210, பெர்க்ஸ் மான்செஸ்டர் அபார்ட்மெண்ட் எதிரில், ராஜீவ் காந்தி நகர் ரோடு, உப்பிலிபாளையம், சிங்கநல்லூர், கோவை - 641015

நேரம் - காலை 9 மணி முதல்

மேலும் தகவல்களுக்கு: எஸ்.டி. பாலகிருஷ்ணன் 9443668881 / ம. சீனிவாசன் 7401840665

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x