

மதுரை
தமிழக உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை இளையான்குடியைச் சேர்ந்த லட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மாநகராட்சி, மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு பத்து ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த இரு உள்ளாட்சி தேர்தலில் தாயமங்கலம் மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டுகள் ஆதிதிராவிட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் சுழற்சி முறையில் இரு வார்டுகளும் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தேர்தலிலும் இரு வார்டுகளும் ஆதிதிராவிட பிரிவினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பல்வேரு ஊராட்சிகளில் வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. எனவே தமிழக உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து, சுழற்சி முறையை முறையாக பின்பற்றி வார்டு இடஒதுக்கீடு அறிவிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர். தாரணி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.